Wednesday, March 15, 2023

12. ஆதிபர்வம் - 10. மூன்று சகோதரர்கள்

 சந்தனு சத்தியவதியை மணந்து கொண்டான். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீரியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

சந்தனுவின் மரணத்திற்குப் பிறகு, பீஷ்மர் சித்ராங்கதனை அரியணையில் அமர்த்தினார். சித்ராங்கதன் பெரும் பராக்கிரமசாலி. அவன் பல அரசர்களை வென்றான்.

சித்ராங்தகனை எந்த மனிதராலும் வெல்ல முடியாது என்பதும், அசுரர்கள் (அசுரர்கள்) மற்றும் தேவர்கள் (வானவர்கள்) மட்டுமே அவனை வெல்ல முடியும் என்பதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒருமுறை ஒரு கந்தர்வன் சித்ராங்கதனைத் தன்னுடன் சண்டையிடுமாறு சவால் விடுத்தான். சித்ராங்கதன் அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டான். இருவரும் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று ஆண்டுகள் சண்டையிட்டனர். போரின் இறுதியில், சித்ராங்கதன் அவனை விட அதிக வலிமை வாய்ந்த அந்த கந்தர்வனால் கொல்லப்பட்டான்.

சித்ராங்கதனுக்கான இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டதும், பீஷ்மர் விசித்திரவீரியனை அரியணையில் அமர்த்தினார். விசித்ரவீர்யன் ஆட்சியின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குச் சிறிய வயதினனாக இருந்ததால், பீஷ்மர் தனது மாற்றாந்தாய் சத்தியவதியின் தலைமையில் நாட்டின் ஆட்சியை நடத்தி வந்தார்

விசித்ரவீரியன் திருமண வயதை அடைந்ததும், பீஷ்மர் அவனுக்குத் தகுந்த இளவரசியைத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். 

காசி அரசர் தனது மூன்று அழகான மகள்களின் சுயம்வரத்துக்கு (சுயம்வரம் என்பது ஒரு அரசகுமாரி தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி வந்திருக்கும் அரசர்கள். இளவரசர்கள் ஒருவருக்கு மாலையிட்டு, அவரைத் தன் கணவராகத் தேர்ந்தெடுக்கும் ஒரு முறை)) ஏற்பாடு செய்ததாக பீஷ்மர் அறிந்தார்.

பீஷ்மர் விசித்திரவீரியனின் பிரதிநிதியாக சுயம்வரத்திற்கு செல்லத் தீர்மானித்தார். இதை சத்தியவதியிடம் தெரிவித்து, அவருடைய ஒப்புதலைப் பெற்ற பிறகு சுயம்வரத்துக்குச் சென்றார்.

சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பல அரசர்கள் அரசவையில் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் யார் என்பதை மணப்பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மன்னர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பீஷ்மரின் பெயர் சொல்லப்பட்டவுடன், அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து, மணமகள்களின் தந்தையான காசி மன்னனிடம் எட்டு வகையான திருமணங்களைப் பற்றிக் கூறினார், ஒரு அரசன் தான் மணக்க விரும்பும் பெண்ணை விலைமதிப்பற்ற சொத்தாகக் கருதினால், அவன் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முடியும் என்று முனிவர்கள் கூறியிருப்பதை அவர் அவனுக்குச் சுட்டிக்காட்டினார். 

பின்னர் பீஷ்மர் மூன்று மணப்பெண்களையும் அழைத்துச் சென்று தனது தேரில் ஏற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த அரசர்களிடம் "உங்களால் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்!" என்று சவால் விடுத்தார்.

கூடியிருந்த மன்னர்களில் பலர் தங்கள் ஆயுதங்களை உருவி எடுத்துக் கொண்டு பீஷ்மருடன் போரிடத் தொடங்கினர். பீஷ்மர் அவர்களுடைய ஆயுதங்களை அழித்து, அவர்களைக் காயப்படுத்தி அவர்களை விரட்டினார்.

சல்ய மன்னன் மட்டும் எளிதில் விட்டுக் கொடுக்காமல் பீஷ்மரிடம் தொடர்ந்து சண்டையிட்டான். மற்ற மன்னர்கள் அந்தச் சண்டையை வேடிக்கை பார்த்தபடி நின்றனர். சண்டையில் பீஷ்மர் சல்யனை வீழ்த்தினார், ஆனால் அவனைக் கொல்லாமல் விட்டார். தோல்வியடைந்த சல்யன் தன் நாட்டுக்குத் திரும்பினான்.

பீஷ்மர் மூன்று இளம் பெண்களையும் குரு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்து தனது மாற்றாந்தாய் மகன் விசித்ரவீரியனிடம் அளித்தார். சத்தியவதியுடன் கலந்தாலோசித்த பிறகு, விசித்திரவீரியன் மூன்று பெண்களையும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​மூன்று பெண்களில் மூத்தவளான அம்பா, பீஷ்மரிடம் வந்து, “நான் ஏற்கனவே சௌப அரசரை என் கணவனாகத் தேர்ந்தெடுத்துவிட்டேன், அவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். என் தந்தையும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார். சுயம்வரத்தின்போது நான் அவரைத் தேர்ந்தெடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. நீங்கள் நீதி, ஒழுக்கம் இவை பற்றி எல்லாம் தெரிந்தவர். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்” என்றாள்.

நல்லொழுக்கங்களைக் கொண்ட, வேதங்களை நன்கு அறிந்த பிராமணர்களிடம் பீஷ்மர் ஆலோசனை கேட்டார். அதற்குப் பிறகு, அவர் அம்பாவிடம் சென்று, "உன் விருப்பம் எதுவோ அதன்படி நடந்து கொள். அதற்கு உனக்கு முழு சுதந்தரம் உண்டு!" என்று கூறினார்.

அம்பா அரண்மனையை விட்டு வெளியேறித் தன் காதலனைச் சந்திக்கச் சென்றாள்.

விசித்ரவீரியனுக்கும் மற்ற இரண்டு இளவரசிகளான அம்பிகா, அம்பாலிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

விசித்ரவீரியன் ஏழு வருடங்கள் தன் இரு மனைவியருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அதற்குப் பிறகு, அவன் ஒரு கொடிய நோயால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

தனது இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே மறைந்தது, குரு வம்சத்துக்கு வாரிசு இல்லாமல் போனது, எஞ்சியிருக்கும் ஒரே இளவரசன் பீஷ்மனும் அரசனாகும் உரிமையைத் துறந்தது ஆகிய நிகழ்வுகளால் சத்தியவதி சோகத்தில் மூழ்கினாள்.

குரு வம்சம் சந்ததி இல்லாமல் துண்டிக்கப்பட்டு, அதனால் பீஷ்மரின் முன்னோர்கள் நரகத்தில் தள்ளப்படக் கூடாது என்பதற்காக பீஷ்மர் விதவைகளாகி விட்ட விசித்திரவீரியனின் இரண்டு மனைவிகள் மூலம் தங்கள் சந்ததியை வளர்க்க வேண்டும், அல்லது தன் சபதத்தைக் கைவிட்டு அரியணை ஏற வேண்டும், அல்லது வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் சத்தியவதி இறைஞ்சினாள். 

இந்த அறிவுரையை அங்கிருந்த அறிஞர்களும் ஞானிகளும் ஆதரித்தனர்.

இதற்கு பீஷ்மர் “அம்மா,  நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவது பாரம்பரியத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தாலும், நான் பிரம்மச்சரியத்தை ஏற்றுக் கொண்டதாலும், அரியணை ஏறமாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டதாலும் என்னால் அவ்வாறு செய்ய முடியாது. எந்தச் சூழலிலும் நான் எனது உறுதிமொழியிலிருந்து விலக மாட்டேன்!" என்று மறுமொழி அளித்தார்.

"இந்த உறுதியை நான் உங்கள் தந்தைக்கு அளித்திருக்கிறேன். ஒரு க்ஷத்ரியர் (வீரர் இனத்தைச் சேர்ந்தவர்) ஒருபோதும் நம்பிக்கை மீறலில் ஈடுபடக்  கூடாது" என்று அவர் சுட்டிக் காட்டினார்.

 அது போன்ற சூழ்நிலைகளில் பின்பற்றப்பட வேண்டிய சரியான வழி என்ன என்பதை அறிய வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை பீஷ்மர் மேற்கோள் காட்டினார். 

முதலில் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமனின் கதையை பீஷ்மர் எடுத்துக் கூறினார்.  

"ஹைஹயா என்ற மன்னனின் மூன்று மகன்களால் தன் தந்தை கொல்லப்பட்டதால் கோபமடைந்த பரசுராமர் அந்த மன்னனைக் கொன்றதுடன், க்ஷத்திரிய இனத்தையே முழுமையாக அழித்தார்.

"க்ஷத்திரிய மன்னர்களின் விதவைகள், தங்கள் வம்சம் தொடர வேண்டும் என்பதற்காகத் தங்கள் வம்சத்தை பிராமணர்களால் மூலம் வளர்த்தனர். அவர்கள் காமத்தினால் அப்படிச் செய்யவில்லை, தங்கள் வம்சம் தொடர வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தனர்.

"அவ்வாறு பெற்றெடுக்கப்பட்ட மகன் தன் உடல்ரீதியான தந்தையான பிராமணனுக்குச் சொந்தமானவன் அல்ல, தாயை மணந்த க்ஷத்திரியனுக்குச் சொந்தமானவன் என்று வேதங்கள் கூறுகின்றன."

பிறகு, பீஷ்மர் தீர்க்கதமஸ் முனிவர் தொடர்பான மற்றொரு வரலாற்று நிகழ்வை மேற்கோள் காட்டினார். 

"வாலி மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, தீர்க்கதமஸ் வாலியின் மனைவியான சுதேசனாவின் மூலம் ஐந்து மகன்களை அளித்தார். புகழ்பெற்றவர்களாக விளங்கிய இந்த மகன்கள் வாலியின் மகன்களாகவே கருதப்பட்டனர்."

இந்த முறையில் செயல்பட வேண்டும் என்று சத்தியவதியிடம் வலியுறுத்திய பீஷ்மர், விசித்ரவீரியனின் மனைவியர் மூலம்  சந்ததியை வளர்க்க ஒரு கற்றறிந்த பிராமணரை அழைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி தன் இளம் வயதில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி பீஷ்மரிடம் கூறினாள், 

“நான் இளம் பெண்ணாக இருந்தபோது, ​​யமுனை ஆற்றின் குறுக்கே பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக என் தந்தை வைத்திருந்த படகை ஓட்டிச் சென்று கொண்டிருந்தேன். 

"ஒருமுறை நான் பராசர முனிவரைப் படகில் அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அவருக்கு என்மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டது, நான் மறுத்தால் அவர் என்னைச் சபித்துவிடுவானோ என்ற பயத்தில் நான் அவர் ஆசைக்கு அடிபணிந்தேன். அப்போது என் என் உடலிலிலிருந்து ஒரு கடுமையான மீன் நெடி வீசும். அவர் அதைப் போகச் செய்து, இப்போது என்னிடமிருந்து வெளிப்படும் நறுமணத்தை அளித்தார்.

"ஆற்றின் நடுவே  இருந்த ஒரு தீவில் நான் அவருடைய குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, நான் மீண்டும் கன்னியாக மாறுவேன் என்று அவர் கூறினார். எனக்குப் பிறந்த பராசரரின் குழந்தை இப்போது ஒரு பெரிய முனிவராகி விட்டான். அவன் த்வைபாயனர் (தீவில் பிறந்தவன்) என்ற பெயரால் அறியப்படுகிறான். 

"அந்த மாமுனிவன் வேதங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளான். அதனால் அவரன் வியாசர் (பிரிப்பவர் அல்லது பகுப்பவர்) மற்றும் வேதவியாசர் என்றும் அழைக்கப்படுகிறான். 

"அவன் பிறந்த உடனேயே தன் தந்தையுடன் சென்று விட்டான். எனக்கு அவனுடைய உதவி தேவைப்படும்போது அவனை நினைக்கும்படி அவன் என்னிடம் கூறி இருக்கிறான். உன் சகோதரனின் மனைவியர் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கும்படி அவனிடம் கேட்கலாம் என்று நினைக்கிறேன். என் யோசனை சரியென்று நீ கருதினால் நான் அவனை அழைக்கிறேன்."

வியாசர் சிறந்த நற்பண்புகள் மற்றும் மகத்தான சக்தி கொண்ட துறவி என்று பீஷ்மர் அறிந்திருந்ததால், சத்தியவதியின் யோசனையை அவர் ஏற்றுக் கொண்டார்.

சத்தியவதி வியாசரை நினைத்தாள், அவளுடைய அழைப்பை உணர்ந்த வியாசர் உடனடியாக அவள் முன் தோன்றினார்.

வியாசரை உரிய மரியாதையுடன் வரவேற்று, அவருக்கு உணவு அளித்த பிறகு, சத்தியவதி, அவருடைய ஒன்று விட்ட சகோதரரான விசித்ரவீரியனின் மனைவியர் மூலம்  குழந்தைகளைப் பெற்றுத் தரும்படி அவரிடம் கேட்டுக் கொண்டாள்.

இது வழக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை என்று கூறித் தன் தாயின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வியாசர், அம்பிகா, அம்பாலிகா இருவரும் தான் கூறும் விரதத்தை ஒரு வருடம்  கடைப்பிடித்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பிறகுதான் தன்னால் அவர்களுக்குக் குழந்தைகளை அளிக்க முடியும் என்றும் கூறினார்.

குரு வம்சம் நீண்ட காலமாக வாரிசு இல்லாமல் இருப்பதால், வம்சத்தைப் பெருக்குவதற்கான முயற்சிகள் உடனே செய்யப்பட வேண்டும் என்று சத்தியவதி கோரினாள்.

அப்படியானால் அந்தப் பெண்கள் தன் அருவருப்பான தோற்றத்தையும், தன் உடலிலிருந்து வளிப்படும் கடும் துர்நாற்றத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறிய வியாசர், யவ்வாறு செய்வது அந்தப் பெண்களுக்கு மிகவும் கடுமையான தவமாக இருக்கும் என்றார். 

நல்ல ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, படுக்கை அறையில் தனக்காகக் காத்திருக்கும்படி தன் மருமகள்களிடம் கூறுமாறு.வியசர் சத்தியவதியிடம் கூறினார்.

சத்தியவதி தன் மூத்த மருமகள் அம்பிகாவிடம் சென்று, குரு வம்சம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யோசனைக்குச் சம்மதிக்கும்படி அவளிடம் வற்புறுத்தினாள்.

சத்தியவதி திரும்பத் திரும்ப வலியுறுத்திய பிறகு அம்பிகா இதற்கு ஒப்புக் கொண்டாள். 

படுக்கையறைக்குள் வியாசர் நுழையும் போது அம்பிகா படுக்கையில் காத்திருந்தாள். அவருடைய சிடுக்கான தலைமுடியையும், அருவருப்பானன தோற்றத்தையும் கண்டு அவள் கண்களை மூடிக் கொண்டாள். வியாசர் அவளுடன் கூடி இருந்தபோது அவள் ஒருமுறை கூடத் தன் கண்களைத் திறக்கவில்லை.

வியாசர் வெளியே வந்ததும், சத்தியவதி அவரைச் சந்தித்தாள். 

"அம்பிகாவுக்கு வலிமையான, வீரம் மிக்க, புத்திசாலி மகன் பிறப்பான் ஆனால் தன் தாயின் தவறினால் அவன் கண்பார்வை இல்லாதவனகப் பிறப்பான்!" என்று வியாசர் அவளிடம் கூறினார்.

இதைக் கேட்ட சத்தியவதி வருத்தமடைந்தாள். பார்வையற்ற ஒருவனால் ராஜ்யத்தைக் காக்க முடியாது என்பதால் அரசனாவதற்கு இன்னொரு மகனைக் கொடுக்கும்படி அவள் வியாசரிடம் கேட்டாள். வியாசர் 'அப்படியே ஆகட்டும்' என்று கூறி விட்டுச் சென்றார். உரிய காலத்தில், அம்பிகா ஒரு பார்வையற்ற குழந்தையைப் பெற்றெடுத்தாரள்.

தன் இளைய மருமகள் அம்பாலிகாவின் சம்மதத்தைப் பெற்ற பிறகு, சத்தியவதி மீண்டும் வியாசரை அழைத்தாள். வியாசரின் தோற்றத்தால் திகிலடைந்த அம்பாலிகா, பயத்தால் வெளிறினாள்.

வியாசர் சத்தியவதியிடம் "அம்பாலிகாவின் மகன் வெளிர் நிறமாக இருப்பான்" என்று கூறி விட்டு, அவனை பாண்டு (வெளிர் நிறத்தவன்) என்று அழைக்குமாறு பரிந்துரைத்தார்.

இந்த முறையும் ஏமாற்றமடைந்த சத்தியவதி இன்னும் ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்க, வியாசர் மீண்டும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி விட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.

சிறிது காலம்  கழித்து, சத்தியவதி அம்பிகாவிடம் இன்னொரு குழந்தை பெறுவதற்காக மீண்டும் வியாசருடன் இணையுமாறு வேண்டினாள்.

முனிவரின் அருவருப்பான தோற்றத்தையும் அவரிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான வாசனையையும் நினைவு கூர்ந்த அம்பிகா அவரைத் தவிர்க்க விரும்பினாள். அவள் அழகு மிகுந்த தன் பணிப்பெண் ஒருத்தியைத் தன் ஆபரணங்களால் அலங்கரித்து வியாசரிடம் அனுப்பினாள்.

வியாசர் வந்ததும், பணிப்பெண் அவருக்கு வணக்கம் செலுத்தி, மரியாதையுடன் உபசரித்து, மகிழ்ச்சியுடன் காத்திருந்தாள். 

அவளைக் கண்டு மகிழ்ந்த வியாசர், "பணிப்பெண்ணே, இனி நீ அடிமையாக இருக்கமாட்டாய். உலகின் மிகச் சிறந்த அறிவாளி  என்று அறியப்படும் நல்லொழுக்கமுள்ள குழந்தையை நீ பெற்றெடுப்பாய்" என்றார்.

வியாசர் சத்தியவதியிடம் தான் அம்பிகாவால் ஏமாற்றப்பட்டதையும், அவள் சூத்திர இனப் பெண் மூலம் மகனைப் பெற்றெடுக்கச் செய்ததையும் கூறி விட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

பணிப்பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கு விதுரன் என்று பெயரிடப்பட்டது. வியாசரின் மகன் என்பதால் அவன் திருதராஷ்டிரன், பாண்டு இவர்களின் சகோதரனாகவே கருதப்பட்டான்.

விதுரன் ஆசைகளிலிருந்தும், உணர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவன். அவன் அரசாங்கத்தை நடத்துவதற்கான விதிகளையும், வழிமுறைகளையும் நன்கு அறிந்தவன். மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பூமியில் பிறந்த தர்ம தேவன்தான் விதுரன்.

ஆதிபர்வம் - 9. பீஷ்மரின் சபதம்

No comments:

Post a Comment