Sunday, November 15, 2020

4. ஆதிபர்வம் - 2. தேவர்களும் அசுரர்களும்

காஸ்யப முனிவருக்குப் பல மனைவிகள் உண்டு.

அவர்களுள், அதிதியின் புதல்வர்கள் அற வழியில் நடப்பவர்கள். அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

திதியின் புதல்வர்கள் தீய இயல்பு கொண்டவர்கள். அவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர், (சுரர்கள் என்பது தேவர்களைக் குறிக்கும் சொல். அசுரர்கள் என்பது இதற்கு எதிர்மறையான சொல்.)

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே அடிக்கடி போர் மூண்டது. எல்லாப் போர்களிலுமே அசுரர்கள் தோற்றனர்.

திரும்பத் திரும்பத் தோல்வி அடைந்ததால் அசுரர்கள் விண்ணுலகில் இருந்த தங்கள் ராஜ்யத்தை இழந்தனர். அரசாளும் உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. 

தங்கள் சக்தியைப் பயன்படுத்தி அசுரர்கள் பூமியில் பிறவி எடுத்தனர். பிராணிகள், மனிதர்கள் என்று பல வடிவங்களில் அவர்கள் பிறந்தனர்.

அவர்கள் எல்லா வகை மனிதர்களையும் தொந்தரவு செய்து அவர்களுக்குத் துன்பம் விளைவிக்கத் தொடங்கினர். அவர்கள் முனிவர்களுக்கும் இடையூறுகள் செய்து அவர்களது தவத்துக்கும் சடங்குகளுக்கும் இடையூறுகள் செய்தனர்.

அசுரர்களின் கொடிய செயல்களால் ஏற்பட்ட சுமையைப் பொறுக்க முடியாத பூமாதேவி படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் சென்று தன் சுமையைக் குறைக்கும்படி வேண்டினார்.

தேவர்களை அவளுக்கு உதவச் சொல்வதாக பூமாதேவிக்கு வாக்களித்த பிரம்மா, தேவர்களை அழைத்து பூமியில் பிறவி எடுத்து அசுரர்களை அழிக்கும்படி அவர்களுக்குக் கட்டளை இட்டார்.

தேவர்கள் பிரம்மாவின் கட்டளையை ஏற்றுக் கொண்டனர். 

பிறகு அவர்கள் தேவர்களுக்கெல்லாம் தேவரும், தீமையை அழிப்பவருமான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்துக்குச் சென்று, அவரும் பூவுலகில் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளை விஷ்ணு ஏற்றுக் கொண்டார். 

பூவுலகில் தாங்கள் ஏற்க வேண்டிய பாத்திரங்களைப் பற்றி அவர்கள் விஷ்ணுவிடம் விவாதித்தனர்.

(பிரம்மாவின் கட்டளைப்படி பூவுலகில் பிறந்த எல்லா தேவர்களின் பெயர்களையும் வைசம்பாயனர் கூறுகிறார். (அது மிக நீண்ட பட்டியல் என்பதாலும், மகாபாரதக் கதையை அறிந்து கொள்ள இந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லை என்பதாலும், இந்தப் பதிவில் அது கொடுக்கப்படவில்லை.)

தேவர்கள் முனிவர்களின் வம்சத்தில் பிறந்தனர். இறுதியில் அவர்கள் அசுரர்களை முழுவதுமாக அழித்து, பூமியை வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமாகச் செய்தனர்.

5. ஆதிபர்வம் - 3. சகுந்தலை

3. ஆதிபர்வம் - 1. வைஸம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறுகிறார்



Saturday, November 7, 2020

3. ஆதி பர்வம் - 1. வைஸம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறுகிறார்

அபிமன்யுவின் புதல்வனும் அர்ஜுனனின் பேரனுமான பரீட்சித் ஒரு முறை காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு மானின் மீது அம்பைச் செலுத்தினான். காயம் பட்ட மான் ஓடி விட்டது,

மானைத் தேடி பரீட்சித் ஓடினான். நீண்ட தூரம் அலைந்தும் அவனால் மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

களைப்படைந்த நிலையில் அவன் சமிக முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். சமிக முனிவர் மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து கொண்டு, பசுக்களிடம் பால் குடித்த கன்றுகளின் வாயிலிருந்து வந்த நுரையை அருந்திக் கொண்டிருந்தார்.

பரீட்சித், முனிவரிடம், “நான் அரசன் பரீட்சித் . அபிமன்யுவின் புதல்வன். நான் வேட்டையாடிய மான் ஒன்று ஓடி விட்டது. நீங்கள் அதைப் பார்த்தீர்களா?” என்றான்.

முனிவர் மௌன விரதம் அனுசரித்து வந்ததால், அவர் பதில் சொல்லவில்லை. 

முனிவர் பதில் சொல்லாததால் கோபமடைந்த பரீட்சித் ஒரு இறந்த பாம்பைத் தன் வில்லின் நுனியால் எடுத்து முனிவரின் தோளின் மீது போட்டான். அப்போதும் முனிவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

தன் செயலினால் கோபமடையாமல் முனிவர் பொறுமையாக இருந்ததைக் கண்ட பரீட்சித் தான் செய்ததை நினைத்து வருந்தி அமைதியாக அரண்மனைக்குத் திரும்பினான். 

சமிக முனிவரின் மகன் ஸ்ருங்கின் அப்போது வெளியே சென்றிருந்தான். அவன் கடும் விரதங்கள் புரிந்து சக்தியுடன் விளங்கியவன். கோபக்காரன். எளிதில் சமாதானப்படுத்தப் பட முடியாதவன். 

அரசனான பரீட்சித் ஸ்ருங்கினின் தந்தையின் தோள் மீது ஒரு செத்த பாம்பைப் போட்டு அவரை அவமதித்து விட்டதாக ஸ்ருங்கினிடம் அவன் நண்பன் ஒருவன் வந்து சொன்னான்.

இதைக் கேட்டதும் ஸ்ருங்கின் மிகவும் கோபமடைந்து, ஏழு நாட்களுக்குள் பாம்புகளின் அரசனான தட்சகனால் பரீட்சித் கடித்துக் கொல்லப்படுவான் என்று சாபமிட்டான். 

சாபமிட்ட பிறகு, ஸ்ருங்கின் தன் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்றான். இறந்த பாம்பு தோளில் போடப்பட்ட நிலையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். தான் பரீட்சித்துக்குச் சாபமளித்தது பற்றி அவரிடம் கூறினான்.

முனிவர் தன் மகனை இவ்வாறு கடிந்து கொண்டார்: 

“நீ செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. துறவிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

“நாம் அரசன் பரீட்சித்தின் நாட்டில் வாழ்கிறோம், அவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். அவன் நமக்குப் பாதுகாப்பு அளிக்காவிட்டால், நம்மால் அமைதியாகத் தவம் செய்ய முடியாது. 

“பரீட்சித் இங்கே வந்தபோது களைப்படைந்தும், தாகத்துடனும் இருந்தான். அவனுக்கு என் மௌன விரதம் பற்றித் தெரியாது. அவன் அவசரப்பட்டு நடந்து கொண்டான். அவனை நாம் மன்னித்திருக்க வேண்டும். 

“யாகங்களை அரசன் பாதுகாக்கிறான். யாகங்களால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மழை பொழியச் சொல்கிறார்கள். மழை நாம் வளர்ச்சி அடையத் தேவையான உணவை நமக்கு வழங்கும் மரங்களையும், செடிகளையும் வளர வைக்கிறது. 

“அரசன் இல்லாத நாடு துன்பப்படும். நீ அவசரத்துடனும், முதிர்ச்சியின்றியும் செயல் பட்டு விட்டாய்!"

ஸ்ருங்கின் கூறினான்: "நான் செய்தது சரியோ, தவறோ, நான் சொன்ன வார்த்தைகள்  உண்மையாகும். சாபத்தைத் திரும்பப் பெற முடியாது."

தன் குமாரன் இட்ட சாபத்தைப் பற்றி அரசன் பரீட்சித்துக்குத் தெரிவிப்பதற்காக குருமுகன் என்ற தன் சீடனை அரசனிடம் அனுப்பினார் சமிக முனிவர். 

அரண்மனைக்குச் சென்று அரசனைச் சந்தித்த குருமுகன் நடந்தவற்றை அரசனிடம் தெரிவித்தான்.

தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தைப் பற்றி பரீட்சித் அதிகம் கவலைப்படவில்லை. அந்த உயர்ந்த முனிவரின் மௌன விரதம் பற்றி அறியாமல் அவருக்குத் தவறிழைத்து விட்டோமே என்று மிகவும் வருந்தினான். 

பிறகு பரீட்சித் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து, அவர்கள் யோசனையின்படி, ஒற்றைத் தூணால் தாங்கப்பட்டு நிற்கும் ஒரு மாளிகையைக் கட்டினான். 

அந்த மாளிகைக்குள் பிறர் கண்ணில் படாமல் யாரும் நுழைய முடியாதபடி அது காவலர்களால் நெருக்கமாகக் காவல் காக்கப்பட்டது. 

அந்த மாளிகைக்குள் அந்தணர்கள் அமர்ந்து இடைவிடாமல் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைக்குள் நுழைய தட்சகன் ஒரு தந்திரம் செய்தான். 

சில பாம்புகளைத் தவசிகள் போல் வேடம் புனையச் செய்து, அரசருக்குப் பரிசளிக்கப் பழங்களுடன் அவர்களை அரண்மனைக்குள் நுழைய வைத்தான். ஒரு பழத்துக்குள் ஒரு சிறிய புழுவின் வடிவில் தட்சகன் ஒளிந்து கொண்டான். 

அந்தப் பாம்புகள் தவசிகள் போன்ற தோற்றத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து அரசனைச் சந்தித்தன.  

தன்னைக் காண வந்த தவசிகள் மீது சந்தேகம் கொள்ளாத அரசன் அவர்கள் தனக்கு அளித்த பரிசைப் பெற்றுக் கொண்டான். 

'தவசிகள்' சென்றதும், அரசன் தன் அமைச்சர்களுடன் சேர்ந்து அந்தப் பழங்களை உண்ணத் துவங்கினான். விதிவசமாக தட்சகன் ஒளிந்திருந்த பழத்தை அரசன் கையில் எடுக்க நேர்ந்தது. 

பழத்துக்குள்ளிருந்து ஒரு சிறு புழு வெளியே வந்து கொண்டிருந்ததை கவனித்த பரீட்சித், அந்தப் புழுவைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, தன் அமைச்சர்களிடம், "சூரியன் மறையப் போகிறது. சாபம் பலிப்பதற்கான நேரம் முடியப் போகிறது. இந்தப் புழு தட்சகனாக மாறி என்னைக் கடிக்கட்டும். அதன் மூலம் முனிவரின் வார்த்தைகள் உண்மையாகி, என் பாவமும் நீங்கி விடும்" என்றான். 

அங்கே கூடியிருந்த அறிவார்ந்த மனிதர்கள் அரசன் கூறியதை ஆமோதித்தனர். 

அரசன் பரீட்சித் அந்தப் புழுவை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக் கொண்டான். 

பரீட்சித் சிரித்துக் கொண்டிருந்தபோதே, தட்சகன் தன் உண்மை உருவை எடுத்துக் கொண்டு அரசனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு அவனைக் கடித்து உடனே மரணமடையச் செய்தான். 

தட்சகனின் விஷத்தால் மாளிகை முழுவதும் தீப்பிடித்தது போல் எரிய, எல்லா அமைச்சர்களும் அங்கிருந்து எழுந்து ஓடினர். தட்சகன் வானில் எழும்பிச் செல்வதை அனைவரும் பார்த்தனர்.

பரீட்சித்தின் அமைச்சர்கள் அவனுக்கு இறுதிச் சடங்குகள் செய்த பின், அவனுடைய மூத்த மகனான ஜனமேஜயனுக்கு அரசனாக முடி சூட்டினர். ஜனமேஜயன் அப்போது சிறுவனாக இருந்தான். 

சிறிது காலத்துக்குப் பிறகு, ஜனமேஜயனுக்கு ஒரு வலுவான ஆதரவை உருவாக்க எண்ணி, அமைச்சர்கள் காசி தேசத்து அரசன் சுவர்ணவர்மனை அணுகி, அவனுடைய மகள் வபுஷ்டமாவை ஜனமேஜயனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டனர். 

அவர்கள் யோசனையை ஏற்றுக் காசி அரசன் தன் மகள் வபுஷ்டமாவை ஜனமேஜயனுக்குத் திருமணம் செய்து வைத்தான். 

திருமணத்துக்குப் பின் ஜனமேஜயன் பல இடங்களுக்கும் தன் மனைவியுடன் பயணம் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்தான். 

சிறிது காலத்துக்குப் பிறகு ஜனமேஜயன் தன் அமைச்சர்களிடம், தன் தந்தையைப் பற்றியும், அவருடைய பெருமைகளைப் பற்றியும் கேட்டான். 

பரீட்சித் அறவழியிலும், கருணையுடனும் ஆட்சி புரிந்த மிகச் சிறந்த அரசன் என்பதை அவர்கள் விவரித்தனர். 

பிறகு ஜனமேஜயன் அவர்களிடம் தன் தந்தை எவ்வாறு இறந்தார் என்று கேட்டான். 

அவர்கள் நடந்தவற்றை அவனிடம் விவரமாக எடுத்துக் கூறினர். 

பரீட்சித் தட்சகனால் கடிக்கப்பட்டு உயிர் நீங்கிய பிறகு, தன் மந்திர சக்தியால் அரசரை உயிர்ப்பித்து அவரிடம் வெகுமதி பெறலாம் என்று நினைத்து அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்த காஸ்யபர் என்ற அந்தணரை தட்சகன் வழியில் சந்தித்து, பரீட்சித்தை உயிர்ப்பித்தால் அவருக்குக் கிடைக்கக் கூடிய வெகுமதியை அவருக்குக் கொடுத்து அவரைத் திரும்பிச் செல்ல வைத்ததையும் அவர்கள் ஜனமேஜயனிடம் கூறினர். 

தட்சகனுக்கும், காஸ்யபருக்கும் இடையே நிகழ்ந்த சம்பவம் அமைச்சர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று ஜனமேஜயன் அவர்களிடம் கேட்டான். 

யாகத்தீக்குத் தேவையான விறகு வெட்டுவதற்காக ஆலமரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்த ஒரு மனிதன் தட்சகனும், காஸ்யபரும் பேசிக் கொண்டதைக் கேட்டதாகவும், அந்த மரத்தை தட்சகன் கடித்தபோது, மரத்துடன் சேர்ந்து அவனும் இறந்து விட்டதாகவும், காஸ்யபர் தன் மந்திரத்தால் எரிந்து போன மரத்தை உயிர்ப்பித்தபோது அவனும் உயிர் பெற்றதாகவும், நடந்தவற்றை அவன்தான் தங்களிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர்கள் கூறினர். 

தன் தந்தை தட்சகனால் தந்திரமாகக் கடித்துக் கொல்லப்பட்டதை அறிந்த ஜனமேஜயன் தன் தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்க விரும்பினான்.  

தன் தந்தை தட்சகனால் கடிக்கப்பட்ட பின் அவரை உயிர்ப்பிக்க எண்ணி  அரண்மனைக்கு வந்து கொண்டிருந்த காஸ்யபரை வழியிலேயே தடுத்து நிறுத்தி வெகுமதி அளித்துத் திருப்பி அனுப்பி விட்ட தட்சகன் மீது ஜனமேஜயன்ன் கடும் கோபம் கொண்டான். 

தான் பரீட்சித்தைக் கடித்துக் கொன்ற பிறகு காஸ்யபரால் பரீட்சித் உயிர்ப்பிக்கப்பட்டால், தான் ஒரு கேலிப் பொருளாகி விடுவோம் என்று நினைத்துதான் தக்ஷகன் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று ஜனமேஜயனுக்குத் தோன்றியது. தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்கும்படி ஜனமேஜயன் பாம்புகளின் மீது கோபம் கொண்டு அவற்றை அழிக்க முற்பட்டிருந்த உத்தங்கர் என்ற முனிவராலும் தூண்டப்பட்டான்.  

ஜனமேஜயன் தன் தலைமைப் புரோகிதரை அழைத்து, தன் தந்தையை விஷம் மூலம் எரித்த தட்சகனையும் மற்ற பாம்புகளையும் எரித்துக் கொல்ல வேண்டும் என்ற தன் எண்ணத்தை அவரிடம் கூறினான். 

சர்ப்ப யாகம் என்ற ஒரு சிறப்பான யாகத்தின் மூலம் பாம்பகளை அக்னி தேவதைக்கு உணவாகக் கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

அந்த யாகம் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு அத்தகைய யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யும்படி அரசன் அவருக்கு உத்தரவிட்டான். 

முறைப்படி சர்ப்ப யாகம்* நடத்தப்பட்டது. முனிவர்கள் கூறிய மந்திரத்தின் சக்தியால் பல பாம்புகள் யாகத்தீக்குள் ஈர்க்கப்பட்டு தீயில் எரிந்து சாம்பலாயின. 

ஆனால் ஆஸ்திகர் என்ற  முனிவர் தட்சகனை விட்டு விட வேண்டும் என்று ஜனமேஜயனிடம் கேட்டுப் பெற்ற வரத்தால் தட்சகன் காப்பாற்றப்பட்டான்!

யாகத்தில் வியாச முனிவர் கலந்து கொண்டார். 

தன் முன்னோர்களான பாண்டவர்களின் வரலாற்றைக் கூறும்படி ஜனமேஜயன் அவரை வேண்டினான். 

இந்த வரலாற்றை ஒரு புராணமாக முன்பே தொகுத்திருந்த வியாசர், தன் சீடரான வைஸம்பாயனரை அதைக் கூறும்படி பணித்தார். இந்த வரலாறு பின்பு மகாபாரதம் என்று பெயர் பெற்றது. 

இவ்வாறுதான் மகாபாரதக் கதை முதன் முறையாகப் பலர் முன் கூறப்பட்டது. இந்தக் கதையைக் கேட்டவர்களில் ஒருவரான உக்ரஸ்ரவர் என்ற முனிவர் பிறகு இதை நைமிசாரண்யம் என்ற காட்டில் தவம் செய்து வந்த முனிவர்களுக்குக் கூறினார். 

*ஜனமேஜயர் நடத்திய சர்ப்ப யாகம் குறித்த கதை மகாபாரதக் கதைகள் என்ற என் இன்னொரு வலைப்பக்கத்தில் விரிவாகக் கூறப்படும் (விரைவில்)

4. ஆதிபர்வம் - 2. தேவர்களும் அசுரர்களும்

 2. மகாபாரதம் - பின்னணியும் பெருமையும்