Monday, July 24, 2017

1. நுழைவாயில்


நாராயணம் நமஸ்க்ருதவ நரஞ்சைவ நரோத்தமம் 
  தேவீம் சரஸ்வதிம் வ்யாஸம் ததோ ஜயம் உதீரயேத் 

இது மகாபாரதத்தின் துவக்கத்தில் வரும் செய்யுள். "நாராயணனையும், சரஸ்வதியையும், வியாஸரையும் துதித்து மகாபாரதத்தைத் துவங்குகிறேன்"  என்பது இதன் பொருள். இந்தச் செய்யலில் வரும் ஜெயம் என்ற சொல் மகாபாரதத்தைக் குறிக்கிறது. மகாபாரதத்துக்கு 'ஜயம்' என்றும் ஒரு பெயர் உண்டு. (இந்தச் செய்யுள் பாகவதத்திலும்  இருக்கிறது. அங்கே ஜெயம் என்ற சொல்லுக்கு 'வெற்றி' என்று பொருள் கொள்ள வேண்டும்.) இந்தச் செய்யுள் வியாசரால் எழுதப்பட்டிருக்காது என்று கொள்ளலாம்)

ராஜாஜி  எழுதிய 'வியாசர் விருந்து என்ற மகாபாரத நூலை சிறுவயதில்  படித்த காலத்திலிருந்தே எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. சிறு வயதிலேயே ராஜாஜியின் இந்த அற்புதமான நூலைப் படிக்கும்படி என்னைத் தூண்டியது என் தாயார் காலம் சென்ற திருமதி விஜயவல்லி அவர்கள்தான். (ஆரம்பப் பள்ளியில் மட்டுமே படித்த என் தாய் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.)


அதற்குப் பிறகு,  கட்டுரைகள், சமயச் சொற்பொழிவுகள் ஆகியவற்றின் மூலம் மகாபாரதம் பற்றிய பல செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக்  கிடைத்தது.

பொதுவாக, ஒரு பெரிய விஷயத்தைக் கடலுடன் ஒப்பிடுவது வழக்கம். மகாபாரதத்தை ஒரு கடல், ஒரு சமுத்திரம் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். 

ஒரு சமுத்திரத்தைப் போல மகாபாரதத்துக்குள் எண்ணிலடங்காத அரிய விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. பல விற்பன்னர்கள் இந்த சமுத்திரத்துக்குள் மூழ்கிப் பல அற்புதமான  ரத்தினங்களையும், முத்துக்களையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இன்னும் வெளிக் கொணரப்பட்ட வேண்டிய ரத்தினங்கள் நிறைய இருக்கின்றன.

ஆனால் என் சிறிய முயற்சி புதிதாக விஷயங்களைத் தேடி  எடுக்கும் நோக்கம் கொண்டதல்ல.

வியாசர் எழுதிய மகாபாரதக் கதையை முழுமையாக எளிய தமிழில் சொல்வதுதான் என் நோக்கம். ஏற்கெனவே ஆங்கிலத்தில் மகாபாரதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழிலும் எழுதலாமே என்ற ஆர்வத்தினால்தான் இந்த வலைப்பதிவு பிறந்தது.

தமிழில் ஏற்கெனவே பல மகாபாரத நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் மிக எளிமையான முழுமையான நூல் என்று ராஜாஜியின் மகாபாரதத்தைக் குறிப்பிடலாம். (ஆரம்பத்தில் 'வியாசர் விருந்து என்ற பெயரில் வெளிவந்த இந்த நூல், பிறகு 'மகாபாரதம்' என்ற பெயரிலேயே பல பதிப்புகள் வெளிவந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.)

மகாபாரதம் முழுவதையும் அப்படியே தமிழில் மொழி பெயர்த்தும் நூல்கள் வந்திருக்கின்றன. (ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா என்ற அஹோபில மடத்தின் பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன் மகாபாரதத்தின் முழுமையான மொழிபெயர்ப்பு தொடராக வந்தது.)

இந்த வலைப்பதிவில், மகாபாரதம் நேரடி மொழி பெயர்ப்பாக இல்லாமல் ஆனால் முழுக்கதையைத் தாங்கி வருவதாக இருக்கும். வர்ணனைகள், சில கூடுதல் விவரங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு உரையாடல்களையும் சில இடங்களில் சுருக்கி, படிப்பதற்கு எளிமையாகவும் சுவாரசியமாகவும் வழங்க வேண்டும் என்பது என் நோக்கம். எந்த அளவுக்கு இந்த நோக்கத்தை என்னால் செயல்படுத்த முடிகிறது என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்!

மகாபாரதத்தில் பல துணைக்கதைகள் இருக்கின்றன. முக்கியக்கதைக்கு நேரடித் தொடர்பு இல்லாத இந்தக் கதைகளை மகாபாரதக் கதைகள் என்று ஒரு தனி வலைப்பிரிவில் எழுத எண்ணியுள்ளேன். இந்த வலைப்பதிவை  விரைவிலேயே துவங்க விழைகிறேன். ஏற்கெனவே ஆங்கிலத்தில் இந்தக் கதைகள் சிலவற்றை  எழுதியிருப்பதால், இவற்றைத் தமிழிலும் விரைந்து எழுத முடியும் என்று நம்புகிறேன்.

இதைப்படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், அவை திருத்தப்பட்ட வேண்டியவை என்றால், திருத்திக் கொள்ள எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை. அச்சடிக்கப்பட்ட புத்தகம் போல் இல்லாமல் வலைப்பதிவில் தவறுகளை உடனே திருத்திக்கொள்ளும் வசதி இருக்கிறதே!

என் 65ஆவது வயதில் இந்த முயற்சியைத் துவங்கும் நான், நான் வணங்கும் திருமால், அமரர்களாகி விட்ட என் பெற்றோர், என்னை உருவாக்கிய ஆசிரியர்கள் ஆகியோரின் அருளாலும்  எனக்கு எண்ணிலடங்காத உதவிகளைச் செய்து வரும் என் குடும்பத்தினர், உறவினர்,  நண்பர்கள், பிற நலம் விரும்பிகள்  ஆகியோரின் நல்வாழ்த்துக்களாலும், இந்தப் பணியை என் வாழ்நாள் முடிவதற்குள் செய்து முடிப்பேன் என்று நம்புகிறேன்.

மகாபாரதம் என்ற அற்புத உலகுக்கு உங்களை வரவேற்கிறேன்!