Thursday, March 9, 2023

6. ஆதிபர்வம் - 4. பரதன்

சகுந்தலையின் கதையைக் கேட்ட துஷ்யந்தன், "நன்றாகப் பேசினாய்.  அழகான பெண்ணே, நீ எனக்கு மனைவியாக இருப்பாயா? தங்க ஆபரணங்கள்,  பல்வேறு நாடுகளின் அரிய முத்துக்கள், சிறந்த கம்பளங்கள் மற்றும் பலவற்றை உனக்கு அளிப்பேன். என் ராஜ்யம் முழுவதும் உன்னுடையதாக இருக்கும்! நாம் காந்தர்வ* முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றான்.

என் தந்தை வரும்வரை காத்திருப்போம். அவர் என்னை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பார் என்றாள் சகுந்தலை.

ஓ அழகான பெண்ணே! குற்றமற்றவளே! நீ உன்னை எனக்கு அளிக்கலாம். இதை வேதம் அனுமதிக்கிறது. பிரம்ம, தைவ, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, காந்தர்வ,  ராட்சஸ, பைசாஸ என்று எட்டு வகைத் திருமண  முறைகள்  உள்ளன.  இந்த எட்டு வகைத் திருமண  முறைகளில்  எந்த ஒன்றும் சூழ்நிலைகளைப் பொருத்து சரியானதாக  இருக்கும் என்று மனுதர்மம் கூறுகிறது, இருப்பினும், குறிப்பிட்ட சாதியினருக்கு குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன அரசர்களுக்கு காந்தர்வ மற்றும் ராட்சஸ முறைகள் அனுமதிக்கப்படுகின்றன. உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. நாம் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றான் துஷ்யந்தன்.

வழக்கில் உள்ள முறைகளால் அனுமதிக்கப்பட்டால், உங்கள் யோசனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களிடமிருந்து எனக்கு ஒரு வாக்குறுதி தேவை. என் மகன் உங்கள் வாரிசாக இருக்க வேண்டும் என்றாள் சகுந்தலை.

சகுந்தலையைத் தன்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறித்தனமான ஆசையால் உந்தப்பட்ட மன்னன், சற்றும் யோசிக்காமல், சகுந்தலையின் நிபந்தனைக்கு உடனே ஒப்புக் கொண்டான்.

இருவரும் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தனது படைகளின் நான்கு பிரிவுகளையும் அனுப்பி, சகுந்தலையை எல்லாவித  மரியாதைகளுடனும் தன் நாட்டின் தலைநகருக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து துஷ்யந்தன் அவளிடமிருந்து விடைபெற்றான்.

துஷ்யந்தன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு கண்வ முனிவர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். வெட்க மிகுதியால் சகுந்தலை நடந்ததை முனிவரிடம் சொல்லத் துணியவில்லை.

இருப்பினும், அபரிமிதமான ஆன்மீக சக்திகளைக் கொண்ட கண்வர் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

அவர் சகுந்தலையைப் பார்த்து, “கவலைப்படாதே, மகளே! நீ எந்தத் தவறும் செய்யவில்லை. காந்தர்வ முறைத் திருமணம் அரசர்களுக்கு ஏற்றதுதான். துஷ்யந்தன் ஒழுக்கமானவன். உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெரும் பராக்கிரமமும், வீரமும் உள்ளவனாக இருப்பான், அவன் உலகையே ஆள்வான் என்றார்.

தன் வளர்ப்புத் தந்தையின் அன்பான வார்த்தைகளால் நெகிழ்ந்த சகுந்தலை அவரது கால்களைக் கழுவி துஷ்யந்தனுக்கு அவருடைய ஆசிகளை  வழங்குமாறு வேண்டினாள்.

"புரு இனத்தின் அனைத்து அரசர்களும் நல்லொழுக்கம் மிகுந்தவர்கள். அவர்கள் தங்கள் அரியணையை ஒருபோதும் இழக்க மாட்டார்கள்" என்று கண்வர் ஆசி வழங்கினார்.

சகுந்தலைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை சிறந்த வீரம் மற்றும் நற்பண்புகள் கொண்ட மனிதனாக வளரும் என்பதைக் குறிக்கும் மங்களகரமான அடையாளங்கள் குழந்தையின் உள்ளங்கையில் இருந்தன.

சகுந்தலையின் மகன் தன் ஆறாவது வயதிலேயே சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளைப் பிடித்து மரங்களில் கட்டி வைப்பான். இந்தச் சாதனையை நிகழ்த்தியதால் அவனுக்கு சர்வதாமன் (அனைத்தையும்/ அனைவரையும் அடக்கக் கூடியவன்) என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது.

சிறிது காலம் சென்றதும், சிறுவனை துஷ்யந்தனிடம் அழைத்துச் சென்று அவனை மன்னனின் வாரிசு என்று வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கண்வர் முடிவு செய்தார்.

சகுந்தலையையும் அவள் மகனையும் புரு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லும்படி தன் சீடர்கள் சிலரைக் கேட்டுக் கொண்டார் கண்வர்.

சகுந்தலையையும், அவள் புதல்வனையும் கண்வரின் சீடர்கள்  துஷ்யந்தனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தாயையும் மகனையும் அரசவையில் விட்டு விட்டுச் சீடர்கள் தங்கள் ஆசிரமத்துக்குத் திரும்பினர்.

துஷ்யந்தனின் அரசவைக்குச் சென்ற சகுந்தலை அரசனிடம், “அரசே! இதோ உங்கள் மகன்! நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியின்படி அவனை உங்கள் வாரிசாக ஆக்குங்கள் என்றாள்.

"யார் நீ? உன்னைப் பார்த்ததாகவே எனக்கு நினைவில்லை. தயவுசெய்து இங்கிருந்து போய்விடு" என்றான் துஷ்யந்தன்.

மன்னனின் வார்த்தைகளால் அதிர்ந்து போன சகுந்தலை கோபமடைந்து கண்கள் சிவந்தாள். ஆயினும்,கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் கூறினாள்:

அரசே! உங்களுக்கு உண்மை தெரிந்திருந்தும், நீங்கள் அற்பமான மனிதரைப் போல் நடந்து கொள்கிறீர்கள். தன்னிடமே நேர்மையில்லாமல் நடந்து கொள்பவன் தன்னைத்தானே கொள்ளையடித்துக் கொள்கிறான்.

என்ன நடந்தது என்பது வேறு யாருக்கும் தெரியாது என்ற தவறான நம்பிக்கையில் இருக்க வேண்டாம். உங்களுக்குள் வீற்றிருக்கும் நாராயணன் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அவர் முன்னிலையில்தான் நீங்கள் பாவம் செய்தீர்கள். உங்கள் பாவங்கள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார்.

"ஒரு மனிதனின் செயல்களுக்கு சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, பூமி, வானம், நீர், இதயம், யமன், பகல், இரவு, இரவும் பகலும் சந்திக்கும் இரண்டு அந்தி வேளைகள் மற்றும் தர்மம் ஆகியவை சாட்சியாக இருக்கின்றன. பொய் சொல்லித் தன்னைத் தாழ்த்திக் கொள்பவனுக்கு தெய்வங்கள் அருள மாட்டா. அவனுடைய ஆன்மா கூட அவனை மன்னிக்காது.

நீங்கள் வாக்களித்தபடி என்னை இங்கு அழைத்து வராமல் நானே உங்களிடம் வந்திருப்பதால், என்னை இளப்பமாக நடத்த வேண்டாம். நான் உங்கள் மனைவி, நான் முறையாக நடத்தப்பட வேண்டியவள்.

ஒரு பெண்ணின் வயிற்றில் நுழையும் கணவன் மகனாக வெளிப்படுகிறான். அப்படிப் பிறந்த மகன் தன் முன்னோர்களை ‘புத் என்ற நரகத்திலிருந்து மீட்கிறான். அதனால்தான் அவன் புத்திரன் என்று அழைக்கப்படுகிறான்.

ஒரு மகனைப் பெற்றவன் மூன்று உலகங்களையும் வெல்வான். பேரனைப் பெற்றவன் நித்தியத்தை (அழியாத தன்மையை) அடைகிறான். தன் பேரனின் மகன் மூலம், அவன் என்றும் நிலைத்த மகிழ்ச்சியைப் பெறுகிறான்.

ஒரு மகனைப் பெற்ற பெண் உண்மையான மனைவியாகக் கருதப்படுகிறாள். அவள் கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் உண்மையான மனைவி. அவள் ஆணின் ஒரு பாதி. மனைவி ஒரு மனிதனின் முதல் தோழி. மனைவி இருப்பவரால் மட்டுமே சமயச் சடங்குகளைச் செய்ய முடியும். எனவே மனைவி ஒரு மனிதனின் மதிப்பு மிக்க சொத்து.

கணவன் இறப்பதற்கு முன் இறந்து விடும் மனைவி யமனின் உலகத்தில் அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள். ஒரு கணவன் தன் மனைவியின் சகவாசத்தை இவ்வுலகிலும், மறு உலகிலும் அனுபவிக்கிறான்.

ஒரு மனிதன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்று கற்றறிந்தவர்களால் கூறப்படுகிறது. எனவே, ஒரு ஆண் தன் மகனைப் பெற்ற தன் மனைவியைத் தன் தாயாகப் பார்க்க வேண்டும். ஒருவன் தன் மகனின் முகத்தைப் பார்த்தால், அவனுக்குக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஒருவன் தன் மகனின் முகத்தைப் பார்த்து அடையும் இன்பம், ஒருவன் சொர்க்கத்தை அடையும் போது அடையும் இன்பத்தைப் போன்றது. ஒரு மனிதனின் உடல் மற்றும் மன உளைச்சல்கள் அனைத்தும் அவன் தன் மகனின் முகத்தைப் பார்த்தால் மறைந்துவிடும்.

உங்களிடம் வந்து மண்டியிடத் துடிக்கும் உங்கள் மகனை ஏன் அலட்சியமாக நடத்துகிறீர்கள்? எறும்புகள் கூடத் தங்கள் முட்டைகளை ஆதரிக்கின்றன, நல்லொழுக்கமுள்ள நீங்கள் ஏன் உங்கள் மகனை ஆதரிக்க மறுக்கிறீர்கள்? மென்மையான சந்தனக் கூழ், குளிர்ந்த நீர், ஒரு பெண்ணின் தொடுதல் இவை கூட, ஒரு மகனின் தொடுதலைப் போன்ற மகிழ்ச்சியை அளிக்காது!

உங்கள் மகன் இவ்வுலகில் பிறந்தபோது, ‘அவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வான் என்று வானத்திலிருந்து ஒரு தெய்வீகக் குரல் கேட்டது.

என் வாழ்க்கை உங்களைச் சார்ந்துள்ளது, என் இனத்தின் தொடர்ச்சியும் உங்களைத்தான் சார்ந்துள்ளது. ஆறு விண்ணுலக நங்கைகளில் முதன்மையானவளும் (ஊர்வசி, பூர்வசிதி, சகஜன்யா, விஸ்வசி மற்றும் கிருதசி ஆகியோர் மற்ற ஐந்து பேர்), விண்ணிலிருந்து இறங்கி இந்த மண்ணுலகுக்கு வந்தவளுமான மேனகாவுக்கும், அவளால் கவரப்பட்ட விஸ்வாமித்திர முனிவருக்கும் பிறந்தவள் நான்.

என் தாய் என்னைக் காட்டில் துக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டாள். நான் உங்களைச் சந்திப்பதற்கு முன்பு கண்வ முனிவரின் ஆசிரமத்தில் கன்னியாக இருந்தேன். நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, முதலில் என் பெற்றோரால் தூக்கி எறியப்பட்டேன், இப்போது உங்களால் தூக்கி எறியப்படுகிறேன்! நான் என் தந்தையின் இடத்திற்குத் திரும்பிச் சென்று விடுவேன். ஆனால், தயவு செய்து உங்கள் மகனைத் தள்ளி விடாதீர்கள்!”

சகுந்தலையின் பேச்சைக் கேட்ட துஷ்யந்தன் அவளுக்கு இவ்வாறு பதில் கூறினான்:

பெண்கள் பொதுவாகப் பொய் சொல்பவர்கள். உன் பேச்சை யார் நம்புவார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீ காமவலை விரிக்கும் மேனகைக்கும் காம இச்சை கொண்ட விஸ்வாமித்திரனுக்கும் பிறந்தவள்!

வழிபாடு முடிந்ததும், கடவுளுக்குப் படைக்கப்பட்ட பூக்களை ஒருவர் தூக்கி எறிவது போல, உன்னைப் பெற்றெடுத்த பிறகு, உன் தாய் உன்னைத் தூக்கி எறிந்தாள். நீ கேவலமான பெண்ணைப் போல் பேசுகிறாய். உன்னை எனக்குத் தெரியாது. நான் உன் மகனின் தந்தை அல்ல."

துஷ்யந்தன் பேச்சைக் கேட்டுக் கோபமடைந்த சகுந்தலை அவனுக்கு இவ்வாறு பதில் கூறினாள்:

விண்ணுலக நங்கைகளில் என் அம்மா மேனகாதான் முதன்மையானவள். என் பிறப்பு உன்னுடையதை விட உயர்ந்தது. இந்திரன், யமன், குபேரன், வருணன் ஆகியோரின் இருப்பிடங்களுக்குச் செல்லும் சக்தி என்னிடம் உள்ளது. நான் மேரு மலை போல். நீ ஒரு கடுகு!

அருவருப்பான தோற்றம் கொண்ட ஒரு நபர் நபர் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்கும்வரை மற்றவர்களை விடத் தான்  அழகாக இருப்பதாக எண்ணித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்.

ஆனால் அழகாக இருக்கும் ஒரு நபர் மற்றவர்களைக் கேலி செய்ய மாட்டார். தூய்மையாக இருப்பவர் மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசமாட்டார். ஆனால் தீயவன் நல்லவர்களை அவமதிப்பதில் மகிழ்ச்சி அடைவான்.

"தீயவர்கள் நேர்மையானவர்களைக் கெட்டவர்கள் என்று அழைப்பதை விடக் கேலிக்குரியது வேறொன்றுமில்லை! பன்றிகள் பூந்தோட்டத்தில் இருந்தாலும் அழுக்கு மற்றும் அசுத்தத்தையே எப்போதும் தேடும், ஆனால் அன்னப்பறவை நீர் கலந்த பாலிலிருந்து பாலை மட்டும் தனியாகப் பிரித்த பிறகு, அந்தப் பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

ஒரு மகனைப் பெற்ற பிறகு, அவனைத் தன் மகனாகக் கருத மறுப்பவன், அவன் அடைய விரும்பும் உலகங்களை ஒருபோதும் அடைய மாட்டான். தெய்வங்கள் தன் உடைமைகளையும் செல்வத்தையும் அழிப்பதை அவன் காண்பான்.

"உங்கள் மகனை ஏற்றுக் கொண்டு சத்தியத்தை மதிக்குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நூறு அஸ்வமேத யாகங்களை சத்தியத்திற்கு எதிராக எடைபோட்டபோது, சத்தியம்தான் அதிக எடை கொண்டிருந்தது!

வேதம் கற்றல் மற்றும் புண்ணியத் தலங்களில் நீராடுதல் இவற்றுக்கு உள்ள  அதே மதிப்பு சத்தியத்திற்கு உள்ளது. சத்தியம்தான் கடவுள். உங்கள் உறுதிமொழியை மீறாதீர்கள்.  நீங்களும் உண்மையும்  இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,

என் வார்த்தைகளை நீங்கள நம்பவில்லை என்றால், நான் இங்கிருந்து சென்று விடுகிறேன், ஆனால் நீங்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகு, நான்கு கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த உலகை என் மகன்தான் ஆட்சி செய்வான் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். "

இவ்வாறு கூறி விட்டு, சகுந்தலை அரண்மனையை விட்டு வெளியேறினாள்.

இதற்குப் பிறகு, துஷ்யந்தன், அரசவையில் தன் மந்திரிகள் மற்றும் குருமார்களுடன் இருந்தபோது, வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது,

துஷ்யந்தா! சகுந்தலை கூறியது உண்மைதான். உன் மகனை ஏற்றுக் கொள், சகுந்தலையை அவமதிக்காதே. அந்தச் சிறுவன் உன்னால் போற்றப்பட வேண்டியவன் என்பதால், அவன் பரதன் (நேசத்துக்குரியவன்) என்று பெயருடன் விளங்குவான்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட துஷ்யந்தன் தன் மந்திரிகளிடமும், குருமார்களிடமும், “வானத்திலிருந்து வந்த குரல் சொன்னவற்றைக் கேட்டீர்களா? அவன் என் மகன் என்று எனக்குத் தெரியும். ஆனால் சகுந்தலையின் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமே நான் அவனை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்களில் சிலருக்கு அவன் பிறப்பு பற்றிச் சில ஐயப்பாடுகள் இருந்திருக்கும், அவனைத் தூய்மையானவனாகக் கருதி இருக்க மாட்டார்கள் என்றான்.

துஷ்யந்தன் அந்தச் சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டு, ஒரு தந்தை செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தான். தன் மகனைக் கட்டிப் பிடித்து, ஒரு தந்தை தனது மகனின் ஸ்பரிசத்தால் பெறும் மகிழ்ச்சியை அனுபவித்தான். அந்தணர்கள் சிறுவனை ஆசீர்வதித்தனர், கவிஞர்கள் அவனைப் பாராட்டினர்.

துஷ்மந்தன் சகுந்தலையைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவன் அவளிடம், "தேவி! யாருக்கும் தெரியாமல் நம் இணைப்பு நடந்ததால், அதை அங்கீகரிக்க விரும்பினேன். உன் வார்த்தையின் அடிப்படையில் உன்னையும் என் மகனையும் நான் ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் நம் இணைப்பைக் காமத்தின் விளைவாக ஏற்பட்டதாகவும், நம் மகன் தூய்மையற்ற பிறப்பால் உருவானதாகவும் கருதியிருப்பார்கள். தயவு செய்து என்னை மன்னித்து, கோபத்தில் எனக்கு எதிராகப் பேசிய கடுமையான வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்!” என்றான்.

துஷ்யந்தன் தன் மகனுக்கு பரதன் என்று பெயரிட்டு, அவனைத் தன் வாரிசாக அறிவித்தான்.

துஷ்யந்தனுக்குப் பிறகு பரதன் அரசனானான். அவனுடைய தேர்களின் சக்கரங்கள் உலகம் முழுவதையும் சுற்றின. அவன் இந்த உலகின் எல்லா மன்னர்களையும் வென்று. பெரும் புகழ் பெற்றான். அவன் சக்ரவர்த்தி (பேரரசர்) மற்றும் சார்வபௌமன் (உலகம் முழுவதையும் ஆள்பவன்)  என்றும் அறியப்பட்டான்.

பரதன் பசு யாகம், குதிரை யாகம் உட்படப். பல யாகங்களைச் செய்தான். அந்த யாகங்களில் கண்வ முனிவர் தலைமைப் புரோகிதராக இருந்தார்.

பரதனிடமிருந்துதான் மாபெரும் பரத வம்சம் உருவானது. கடவுளுக்கு நிகரான பல மன்னர்கள் இந்த வம்சத்தில் பிறந்துள்ளனர்.

வைசம்பாயன முனிவர் பரத வம்சத்தில் இருந்த முக்கியமான மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1 - காந்தர்வ பாணி திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரஸ்பர ஈர்ப்பின் அடிப்படையிலான திருமணமாகும், சடங்குகள், சாட்சிகள் தேவையில்லை, மணமகன் மற்றும் மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கு பெற வேண்டியதில்லை. 

7. ஆதிபர்வம் - 5. யயாதி

No comments:

Post a Comment