Monday, March 13, 2023

10. ஆதி பர்வம் - 8. அஷ்ட வசுக்கள்

மழைக் கடவுளான வருணனின் மகனான வசிஷ்டர், கடுமையான தவத்தின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்த ஒரு சிறந்த முனிவர். பிற்காலத்தில் அவர் அபாவர் என்றும் அழைக்கப்பட்டார்.

வசிஷ்டர் மேரு மலையில் வசித்து வந்தார். அங்கேயே தவத்தில் ஈடுபட்டிருந்தார்.

தட்சனுக்கு சுரபி என்ற மகள் இருந்தாள், அவள் காசியப முனிவரை மணந்தாள். சுரபிக்கு நந்தினி என்ற பசு பிறந்தது. இந்த தெய்வீகப் பசு யார் தன்னிடம் எதைக் காட்டாலும் அதை அளிக்கும் வள்ளல் தன்மை கொண்டிருந்த வற்றாத செல்வப்பசுவாக இருந்தது.

வசிஷ்டர் தவம் செய்வது தொடர்பான தன் தினசரிக் கடன்களுக்கு உதவுவதற்காக நந்தினி என்ற இந்தப் பசுவைப் பயன்படுத்தி வந்தார். அவருக்கு ஹோமம் (அக்கினி யாகம்) செய்வதற்குத் தேவையான நெய் போன்றவற்றை நந்தினி அவருக்கு வழங்கி வந்தது. இந்தச் சடங்குகள் அவரைப் போன்ற முனிவர்களால் வழக்கமாகச் செய்யப்படுபவை.

வசிஷ்டரின் ஆசிரமத்தை வசிக்கும் இடமாகக் கொண்ட நந்தினி சுதந்திரமாகக் காடுகளில் சுற்றித் திரிந்தாள். கேட்டதையெல்லாம் வழங்கும் நந்தினின் தெய்வீக சக்திக்காக அவள் எல்லா முனிவர்களாலும் அதிகம் விரும்பப்பட்டாள்.

ஷ்ட வசுக்கள் என்ற எட்டு சகோதரர்களில் மூத்தவன் ப்ரிது. ஒருமுறை தங்கள் மனைவிமார்களுடன் காட்டுக்கு வந்தனர். அவர்கள் காட்டில் சுற்றித் திரிந்தபோது, ​​அற்புதமான தோற்றம் கொண்ட நந்தினியைக் கண்டனர்..

வசுக்களில் ஒருவனான தியுவின் மனைவி தன் கணவனிடம் நந்தினியைச் சுட்டிக் காட்டி அதைப் பற்றிக் கேட்டாள். அது வசிஷ்ட முனிவருக்கு சொந்தமான தெய்வீகப் பசு என்றும், அதன் பாலைக் குடிப்பவர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் இளமையை குன்றாமல் இருப்பார்கள் என்றும் தியு அவளிடம் கூறினான்.

உசினர முனிவரின் மகளும், புத்திசாலியும், உண்மையின் மீது பக்தி கொண்டவளுமான ஜிதாவதி என்ற ஒரு தோழி தனக்கு இருப்பதாக தியுவிடம் கூறிய அவள், ஜிதாவதிக்கு நந்தினியின் பாலைக் கொடுத்து அவள் நோய்நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ வகை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்.

தன் அழகிய மனைவியைத் திருப்திப்படுத்த விரும்பிய தியு தான் ஒரு பாவமான செயலைச் செய்யப் போகிறோம் என்பதை உணராமல், தன் சகோதரர்களின் உதவியுடன் நந்தினியைக் களவாடி எடுத்துச் சென்றான்.

வசிஷ்ட முனிவர் மாலையில் தனது இல்லத்திற்குத் திரும்பியபோது நந்தினியைக் காணவில்லை என்பதைக் கண்டார். தன் ஞான உணர்வின் மூலம், நடந்ததை அவர் அறிந்து கொண்டார். கோபமடைந்து, எட்டு வசுக்களும் பூமியில் பிறக்க வேண்டும் என்று அவர் சாபம் அளித்தார்.

முனிவரின் சாபத்தைப் பற்றி அறிந்ததும், வசுக்கள் பசுவை அவரிடம் திருப்பிக் கொடுத்துத் தங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

தனது சாபத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறிய வசிஷ்டர், தியுவைத் தவிர மற்ற ஏழு சகோதரர்களும் பூமியில் பிறந்த ஒரு வருடத்திற்குள் சாபத்திலிருந்து விடுபடுவார்கள் என்று சாபத்தீன் தீவிரத்தைச் சற்றே குறைத்தார்.

இருப்பினும், முக்கியக் குற்றவாளியான தியூ பூமியில் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும். என்று கூறிய வசிஷ்டர், அவனுக்குக் குழந்தைகள் இருக்காது என்றும், அவன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பான் என்றும் கூறினார்.

சந்தனுவிடம் அஷ்ட வசுக்களின் கதையை விவரித்த கங்கை, தான் வசுக்களைச் சந்தித்ததையும், தாங்கள் மனிதர்களாகப் பிறக்கும்போது அவள் தங்களுக்குத் தாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அவளிடம் கேட்டுக் கொண்டதையும் கூறினாள்.

தன் குழந்தைக்கு காங்கேயன், தேவவிரதன் என்ற பெயர்களை கங்கை பரிந்துரைத்தாள். குழந்தை வளர்ந்து இளைஞனான பிறகு அவனை சந்தனுவிடம் திருப்பி அனுப்புவதாக உறுதியளித்து விட்டு, கங்கை குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

ஆதி பர்வம் - 9. பீஷ்மரின் சபதம்

ஆதி பர்வம் - 7. சந்தனு

No comments:

Post a Comment