Tuesday, March 14, 2023

11. ஆதிபர்வம் - 9. பீஷ்மரின் சபதம்

மன்னன் சந்தனு ஞானம், நல்லொழுக்கம், நேர்மை ஆகிய பண்புகளுக்காகப் பெயர் பெற்றிருந்தான். 

குரு வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தில் இருந்து கொண்டு அவன் உலகம் முழுவதையும் ஆண்டான்.

சந்தனு ஒரு பேரரசனாக இருந்தும் மற்ற அரசர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருந்ததால் அண்டை நாடுகளிலிருந்த மன்னர்கள் பயமின்றி வாழ்ந்தனர்.

ரு நாள், சந்தனு வேட்டையின்போது ஒரு மானின் மீது அம்பைச் செலுத்திய பின், தப்பி ஓடிய மானைத் துரத்திக் கொண்டு கங்கைக் கரை ஓரமாக ஓடியபோது, ​​ஒரு இடத்தில் கங்கை நதி  ஆழமில்லாமல் இருப்பதைக் கண்டு வியந்தான்.

அப்போது வலிமையான உருவமும், அழகான தோற்றமும் கொண்ட ஒரு இளைஞன் ஒரு அஸ்திரத்தைப் (அஸ்திரம் என்பது சிறப்பான சக்தி கொண்ட அம்பு) பயன்படுத்தி நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதைக் கண்டான்.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சாந்தனுவின் மகன் தேவவிரதன்தான்! தேவவிரதன் (தன் தாய் கங்கை தன்னிடம் கூறியிருந்த விவரங்களைக் கொண்டு) சந்தனுவை அடையாளம் கண்டுகொண்டாலும், சந்தனுவால் தன் மகனை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

சற்று நேரத்துக்குப் பிறகு, சந்தனுவின் பார்வையிலிருந்து தேவவிரதன் மறைந்து விட்டான். தான் பார்த்த அந்த இளைஞன் தன் சொந்த மகன்தான் என்ற உண்மை சந்தனுவுக்கு அப்போதுதான் புலப்பட்டது. 

தன் மகனைக் காட்டும்படி சந்தனு தன் மனைவி கங்கையிடம் மானசீகமாக முறையிட்டான். அவனுடைய முறையீட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில். கங்கை, தேவவிரதனுடன் சந்தனுவின் முன் தோன்றினாள். 

தான் முன்பு சந்தனுவுக்கு வாக்களித்திருந்தபடி தேவவிரதனை அவன் தந்தையான சந்தனுவிடம் கங்கை ஒப்படைத்தாள்.

“அரசே, இதோ உங்கள் மகன் தேவவிரதன். இவன் வசிஷ்ட முனிவரிடம் வேதங்களைக் கற்றிருக்கிறான். ஆயுதம் பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி பெற்றுள்ளான். ஒரு அரசனின் கடமைகளைப் பற்றி அறிய வேண்டிய எல்லாக் கல்வியையும் இவன் பெற்றிருக்கிறான். நான் கொடுத்த வாக்கின்படி அவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்!” என்றாள் கங்கை.

பிறகு கங்கை சந்தனுவிடம் விடைபெற்றுத் தன் இருப்பிடத்துக்குச் சென்று விட்டாள். சந்தனு தேவவிரதனைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, தனது அமைச்சர்கள் மற்றும் பிறருக்கு அறிமுகப்படுத்தி, அவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், சந்தனு யமுனைக் கரையில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு இனிமையான நறுமணத்தை உணர்ந்தான். அந்த நறுமணம் வந்த இடத்தைத் தேடி அவன் சென்றபோது, ​அற்புதமான அழகு கொண்ட ஒரு இளம் பெண்ணிடமிருந்து அந்த நறுமணம் வீசுவதைக் கண்டான்.

சாந்தனு அந்தப் பெண்ணிடம் சென்று அவள் யார் என்று வினவினான். மீனவத் தலைவரின் மகள் சத்தியவதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், தான் படகோட்டுபவள் என்றும், ஆட்களைப் படகில்  ஏற்றி அக்கறைக்குக் கொண்டு விடும் தொழிலில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினாள்.

சந்தனு சத்தியவதியின் தந்தையான மீனவத் தலைவரைச் சந்தித்து அவர் மகளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கோரினான்.

தன் மகளை சந்தனுவுக்குத் திருமணம் செய்து வைப்பதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறிய மீனவத் தலைவர், ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் மகன் சந்தனுவின் வாரிசாக அரியணை ஏறுவான் என்று சந்தனு உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

அந்த நிபந்தனையை ஏற்க விரும்பாத சந்தனு அரண்மனைக்குத் திரும்பினான். இருப்பினும், மீனவப் பெண்ணான சத்யவதியை அவனால் மறக்க முடியவில்லை. அவளை அடைய முடியாததை நினைத்து அவன் எப்போதும் ஏமாற்றமும், சோர்வும் மிகுந்த மனநிலையில் இருந்தான். இதை கவனித்த தேவவிரதன், தந்தையிடம் அவருடைய சோகமான மனநிலைக்கான காரணத்தைக் கேட்டான்.

“நீ என் வாரிசு. எனக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் ஒரு மகனை மட்டுமே பெற்றால் அது மகன் இல்லாததற்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நீ வீரச் செயல்களில் ஈடுபட்டு வருகிறாய். நீ போரில் கொல்லப்படலாம். உனக்கு ஏதாவது நேர்ந்தால், பரத வம்சத்துக்கு என்ன ஆகுமோ என்றுதான் நான் கவலைப்படுகிறேன்!" என்று பதிலளித்தான் சந்தனு.

தேவவிரதன் அறிவுக் கூர்மை உள்ளவனாக இருந்ததால், தன் தந்தை தன்னுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்க வைக்கும் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டார் என்பதை உணர்ந்தான்.

 மன்னரின் துயரத்துக்கான காரணம் யாருக்கேனும் தெரியுமா என்பது குறித்து  தேவவிரதன் அமைச்சர்களிடம் விசாரிச்சான்.

சந்தனு சத்தியவதியின் தந்தையைச் சந்தித்தபோது சந்தனுவுடன் இருந்த அமைச்சர், சத்தியவதியைத் திருமணம் செய்து கொள்ள மன்னர் விரும்பியதையும், அவளை அரசனுக்குத் திருமணம் செய்து வைக்க அவள் தந்தை விதித்த நிபந்தனையையும் தேவவிரதனிடம் கூறினார்.

இந்த உண்மையை அறிந்து கொண்டதும், தேவவிரதன், சில க்ஷத்திரியத் தலைவர்களுடன், மீனவத் தலைவரைச் சென்று சந்தித்து, அவருடைய மகள் சத்தியவதியைத் தன் தந்தை சந்தனுவுக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு வேண்டினான். 

தன் மகளுக்குப் பிறக்கும் மகன் அரியணை ஏற வேண்டும் என்ற நிபந்தனையை மீனவத் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சத்தியவதியின் மகன் அரியணை ஏறும் வகையில் தன் அரசுரிமையைத் துறப்பதாக தேவவிரதன் சபதம் செய்தான். 

தேவவிரதனின் தியாகத்தைப் பாராட்டிய மீனவத் தலைவர், “நீங்கள் உங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், உங்கள் மகன்கள் அரியணைக்கு உரிமை கோர மாட்டார்கள் என்று நான் எப்படி உறுதியாக இருக்க முடியும்?" என்றார்.

அதைக் கேட்ட தேவவிரதன், “இந்தக் கணத்திலிருந்து நான் பிரம்மச்சரிய (பிரம்மச்சரியம்) சபதம் செய்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன், குழந்தைகளைப் பெறவும் மாட்டேன்." என்று சபதம் செய்தார்.

தேவவிரதன் இந்த வார்த்தைகளைக் கூறியவுடன், விண்ணுலகிலிருந்து வானவர்களும், முனிவர்களும் அவர்மீது பூமழை பொழிந்தனர்.

"நீ பீஷ்மன் (பயங்கரமான - ஒரு பெரிய சாதனையைச் செய்தவன்)" என்று வானத்திலிருந்து பல குரல்கள் ஒன்றாக இணைந்து ஒலித்தன.

சத்தியவதியின் தந்தை திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு, பீஷ்மரிடம் “நான் என் மகளை உன் தந்தைக்குக் கொடுக்கிறேன்” என்று கூறினார்.

பீஷ்மர் சத்தியவதியிடம், "அம்மா, தயவுசெய்து தேரில் ஏறுங்கள், நம் வீட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினார்.

ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், பீஷ்மர் தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை விவரித்தார். இதைக் கேட்டதும் அரண்மனையில் கூடியிருந்தவர்கள், “நீங்கள் உண்மையிலேயே பீஷ்மர்தான்" என்று உரத்த குரலில் கூறினர்.

தன்னுடைய மகிழ்ச்சிக்காக தன் மகன் செய்த தியாகத்தால் நெகிழ்ந்த சந்தனு,"நீ விரும்பும் வரை உயிர் வாழ்வாய்! உன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே மரணம் உன்னை அணுகும்” என்று தேவவிரதனுக்கு வரம் அளித்தான். (பிற்காலத்தில், குருட்சேத்திரப் போரில் பீஷ்மர் அர்ஜுனனின் அம்புகளாலும், சிகண்டியின் அம்புகளாலும் துளைக்கப்பட்டபோது, ​​பீஷ்மர் இந்த வரத்தைப் பயன்படுத்தி, நல்ல நேரமான உத்தராயணம் வரும் வரை தனது மரணத்தைத் தள்ளி வைத்திருந்தார்)

இவ்வாறு, இளவரசன் தேவவிரதன் தன்னை பீஷ்மராக மாற்றிக் கொண்டான்.

ஹஸ்தினாபுரத்தின் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கும் மகத்தான தியாகத்தைச் செய்தவர் பீஷ்மர்.

ஆதிபர்வம் 10. மூன்று சகோதரர்கள்

ஆதிபர்வம் 8. அஷ்ட வசுக்கள்

No comments:

Post a Comment