Saturday, March 11, 2023

8. ஆதி பர்வம் - 6. மஹாபிஷன்

இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த மன்னன் மஹாபிஷன். பல நாடுகளை வென்றும், எல்லா யாகங்களிலும் மிகப் பெரியதாகக் கருதப்படும் ராஜசூயம் உட்பட பல யாகங்களைச் செய்தும்  பெருமையடைந்தான். ஆனால், அவன் தன் காம இச்சையால் வீழ்ச்சி அடைந்தான்

ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மாவை வழிபடுவதற்காக எல்லா வானவர்களும்  அவையில் கூடியிருந்தனர். மன்னன் மகாபிஷனும் அவையில் இருந்தான். பல ராஜரிஷிகள் அந்த அவையில் இருந்தனர். புனித நதியான கங்கையும் அங்கே வந்திருந்தாள்.

பிரம்மா அவர்கள் முன் தோன்றி அவரர்களுக்கு வாழ்த்துக் கூறினார். 

அப்போது  திடீரென்று காற்று வீசியதால் ஒரு கணம் கங்கையின் ஆடை பறந்து சற்றே மேலே எழும்பியது. ஆடை கலைந்ததால் அதனால் வெளிப்பட்ட கங்கையின் உடற்பகுதியைப் பார்ப்பதைத் தவிர்க்க வானவர்கள் அனைவரும் தங்கள் தலைகளைக் குனிந்து கொண்டனர். ஆனால் மஹாபிஷன் தன் சபலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கங்கையை வெறித்துப் பார்த்தான்..

மகாபிஷனின் நடத்தையால் கோபமடைந்த பிரம்மா அவன் பூமியில் பிறக்க வேண்டுமென்று சாபமிட்டார். கங்கையும் பூமியில் பிறந்து அவன் மனதைப் புண்படுத்த வேண்டும் என்றும் விதித்தார். மஹாபிஷன் ஆத்திரமடைந்து தன் கோபத்தைக் காட்டியதும், அவன் சாபத்திலிந்து விடுபடுவான் என்றார் பிரம்மா.

மன்னன் மகாபிஷன், தான் பெரும் பராக்கிரமசாலியான பிரதீபா மன்னனின் மகனாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டினான்..

மஹாபிஷன் தன்னைக் காமத்துடன் பார்த்ததால் அவன் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதை கங்கை உணர்ந்தாள்.

தேவர்களின் அவையிலிருந்து வீடு திரும்பும் போது, ​​கங்கை வானவர் குழாமைச் சேர்ந்த அஷ்ட வசுக்கள் என்ற எட்டு சகோதரர்களைச் சந்தித்தாள். அவர்கள் துயரில் ஆழ்ந்திருந்ததை கவனித்த கங்கை அவர்களின் துயருக்கான காரணத்தை அவர்ளிடம் கேட்டாள்.

தாங்கள் ஒரு அதிகாலை நேரத்தில் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​வசிஷ்ட முனிவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்ததை கவனிக்காமல் அவர் மீது இடறி விழுந்து விட்டதாகவும், கோபமடைந்த வசிஷ்டர் தங்களை மனிதர்களாகப் பிறக்கும்படி சபித்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

பிரம்மாவின் ஆணையின்படி கங்கையும் மனிதப் பிறவி எடுக்க வேண்டும் என்பதை அவளிடமிருந்து அறிந்து கொண்ட வசுக்கள் மனிதப் பிறவியில் அவள் தங்களுக்குத் தாயாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

'உங்கள் தந்தையாக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று?" என்று கங்கை வசுக்களிடம் கேட்டபோது,  ​​​​அவர்கள் பிரதீப மன்னனின் மகனான சந்தனுவாகப் பிறக்கப் போகும் மகாபிஷனின் பெயரைக் குறிப்பிட்டனர்.

"நாங்கள் பிறந்தவுடனேயே எங்களை கங்கையாற்றில் எறிந்து விடுங்கள், அப்படிச் செய்தால் நாங்கள் சாபத்திலிருந்து விடுபட்டு விடுவோம்!" என்று வசுக்கள் கங்கையிடம் கூறினர்.

சந்தனுவுக்கு ஒரு மகனையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று கங்கை கேட்டுக் கொண்டபோது, வசுக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். உயிருடன் இருக்கப் போகிறவனுக்கு மற்ற ஏழு சகோதரர்களும் தங்கள் ஆற்றலில் எட்டில் ஒரு பங்கை அளிக்கப் போவதாகவும், ஆனால் அவனுக்குக் குழந்தை பிறக்காது என்றும் அவர்கள் கூறினர்.

9. ஆதிபர்வம் - 7. சந்தனு

7. ஆதிபர்வம் - 5. யயாதி

No comments:

Post a Comment