தன் உறவினரான குந்திபோஜன் என்ற அரசருக்கு முன்பு ஒருமுறை கொடுத்த வாக்கின் அடிப்படையில் சூரசேனன் தன் மகளை குந்திபோஜனுக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார். (பொதுவாக ஆண் குழந்தைகளைத்தான் சுவீகாரமாகக் கொடுப்பார்கள். எனவே இதை ஒரு வியப்புக்குரிய விஷயமாகத்தான் கருத வேண்டும். வழக்கங்களுக்கு மாறாக நடப்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு என்பதற்கு இதை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.)
குந்திபோஜனின் மகளாக ஆன பிறகு ப்ருதாவின் பெயர் குந்தி என்று மாறி விட்டது. குந்திபோஜனின் அரண்மனைக்கு வரும் விருந்தினரை கவனித்து உபசரிக்கும் பணியில் குந்தி தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
ஒருமுறை துர்வாச முனிவர் குந்திபோஜனின் அரண்மனைக்கு வருகை தந்தார். கடுமையான விரதங்களை அனுஷ்டிப்பவர் என்றும் கோபக்கார் என்றும் பெயர் பெற்றவர் துர்வாசர்.
மற்ற எல்லா விருந்தினர்களையும் கவனிப்பது போலவே துர்வாசரையும் குந்தி கவனித்துக் கொண்டாள்.
குந்தியின் சேவையினால் மனம் மகிழ்ந்த துர்வாசர் அவளுக்கு ஒரு வரம் அருளினார். அதன்படி, குறிப்பிட்ட சில தேவர்களை அவள் அழைத்தால் அவர்கள் அவள் முன் தோன்றி அவளுக்குக் குழந்தையை அளிப்பார்கள்.
இப்படி ஒரு வரத்தை துர்வாசர் குந்திக்கு அருளியதற்கு ஒரு காரணம் உண்டு.
குந்தியை மணக்கப் போகும் பாண்டுவுக்கு ஒரு சாபத்தினால் தன் மனைவிக்குக் குழந்தை அளிக்க முடியாமல் போகும் என்பதை துர்வாசர் தன் தவ வலிமையால் அறிந்திருந்ததால்தான் பாண்டுவின் வம்சம் தொடர குந்திக்குக் குழந்தை பேறு உண்டாக வேண்டும் என்பதற்காக இந்த வரத்தை அவர் குந்திக்கு அருளினார்.
முனிவர் கிளம்பிச் சென்ற சிறிது காலத்துக்குப் பின் முனிவர் கொடுத்த வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் குந்திக்கு ஏற்பட்டது.
சூரியனை நினைத்துக் கொண்டு முனிவர் கற்பித்த மந்திரத்தைக் குந்தி உச்சரித்தாள். உடனே அவள் கண் முன் சூரியன் தோன்றினர். சூரியனின் பிரகாசம் அவள் கண்களைக் குருடாக்கி விடுவது போல் இருந்தது.
“என்ன வேண்டும், கேள்!” என்றார் சூரியன்.
துர்வாச முனிவர் அளித்த மந்திரத்தைச் சோதித்துப் பார்க்கத்தான் தான் சூரியனை நினைத்து மந்திரத்தைக் கூறியதாகவும், தன் தவறை மன்னித்து விடும்படியும் குந்தி சூரியனை வேண்டினாள்.
“இந்த
மந்திரத்தைச் சொல்லி நீ என்னை அழைத்ததால் உனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்காமல்
என்னால் இங்கிருந்து போக முடியாது!” என்றார் சூரியன்.
குந்தியின் பயத்தைப் போக்கி அவளை அணைத்துக் கொண்டார் சூரியன்.
சூரியனுடன் கலந்ததன் காரணமாக, குந்திக்கு உடனே ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
தன் வீரத்துக்காகப் புகழ் பெறப் போகும் அந்தக் குழந்தை உடலில்
கவசத்துடனும், காதுகளில் குண்டலங்களுடனும் பிறந்தது.
குந்திக்கு அவளுடைய கன்னித்தன்மையை மீண்டும் அளித்து விட்டு சூரியன் அவளிடமிருந்து விடைபெற்றார்.
குழந்தையை என்ன செய்வது என்று குந்தி யோசித்தாள். கன்னிப் பெண்ணான தனக்குக் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அது தனக்குப் பெரும் அவமானத்தைத் தேடித் தரும் என்று உணர்ந்த குந்தி குழந்தையை ஒரு திறந்த மரப்பெட்டியில் வைத்து யமுனை நதியில் விட்டு விட்டாள்.
சூதன்
என்ற தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தை சூதன் மற்றும் அவன் மனைவி
ராதை இவர்களால் வளர்க்கப்பட்டது.
குழந்தை உடலில் கவசத்துடனும், காதுகளில் குண்டலங்களுடனும் பிறந்ததால், சூதன் குழந்தைக்கு வசுசேனன் (செல்வத்துடன் பிறந்தவன்) என்று பெயரிட்டான்.
வசுசேனன் வளர்ந்ததும், அவன் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துவதில் திறமை பெற்றான். அவன் காலை முதல் இரவு வரை எப்போதும் சூரியனை வணங்கி வந்தான். தன்னிடம் பொருள் கேட்ட அந்தணர்களுக்கு அவர்கள் கேட்ட பொருளைக் கொடுக்கும் வள்ளலாக இருந்தான்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு, தன் மகன் அர்ஜுனனைப் பாதுகாக்க விரும்பிய இந்திரன் ஒரு அந்தணன் வேடத்தில் வசுசேனனிடம் வந்து அவன் உடலோடு ஒட்டி இருந்த கவசத்தைக் கேட்டான்.
வசுசேனன் சற்றும் தயங்காமல் தன் உடலோடு ஒட்டி இருந்த கவசத்தை அறுத்துக் கொடுத்தான். இதனால் அவனுக்குக் கர்ணன் (தன் கவசத்தை உரித்தவன்) என்ற பெயர் வந்தது.
கர்ணனின் பெருந்தன்மையைப்
பாராட்டி இந்திரன் அவனுக்கு இந்திர சக்தி என்ற ஒரு அஸ்திரத்தை (அம்பை)ப் பரிசாக
அளித்தான். மனிதர், தேவர், அரக்கர் என்று எவரையும் கொல்லும் சக்தி படைத்த அஸ்திரம் அது என்று விளக்கினான் இந்திரன்.
No comments:
Post a Comment