திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூன்று குழந்தைகளின் பிறப்புக்குப் பிறகு அந்த நாடு மேலும் செழிப்பாக வளர்ந்தது.
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரையும் பீஷ்மர் தன் சொந்த மகன்களைப் போல் வளர்த்தார்.
மூன்று பிள்ளைகளும் வேதங்களை நன்கு அறிந்த, விளையாட்டுகளில் திறமை கொண்ட இளைஞர்களாக வளர்ந்தனர். அவர்கள் வில் வித்தையிலும், குதிரை மீதும் யானை மீதும் அமர்ந்து சண்டையிடுவதிலும், செய்வதிலும் தேர்ச்சி பெற்றனர்.
திருதராஷ்டிரன் உடல் வலிமை நிறைந்தவனாக இருந்தான். பாண்டு வில்வித்தையில் சிறந்து விளங்கினான். விதுரனோ நற்குணங்களிலும், அறநெறிகள் மற்றும் ஒழுக்க விதிகள் பற்றிய அறிவிலும் தனக்கு யாரும் இணையில்லை என்ற அளவுக்குச் சிறந்து விளங்கினான்.
மூன்று சகோதரர்களில் மூத்தவனான திருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்ததால், பாண்டு மன்னராக முடிசூட்டப்பட்டான்.
ஒரு நாள், பீஷ்மர் விதுரனிடம், “நம் வம்சம் தொடர்ந்து வளர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நம் குடும்பத்தில் இணையும் தகுதி பெற்றுள்ள மூன்று பெண்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். யாதவ குலத்தைச் சேர்ந்த சூரசேனனின் மகள், சுவலாவின் மகள், மற்றும் மத்ர இளவரசி ஆகியோரே அவர்கள். நம் வம்சத்தின் வளர்ச்சிக்காக அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்” என்றார்.
விதுரன், “எங்கள் தந்தை, தாய், ஆசான் எல்லாமே நீங்கள்தான். எனவே, எங்களுக்கு எது சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள்” என்றான்.
திருதராஷ்டிரனுக்குப் பெண் கேட்டு காந்தார மன்னன் சுவாலாவுக்கு தூதர்களை அனுப்பினார் பீஷ்மர். திருதராஷ்டிரன் பார்வை இல்லாதவன் என்பதால் சுவாலா முதலில் சற்றுத் தயங்கினாலும், குரு வம்சத்தின் பெருமையைக் கருத்தில் கொண்டு இந்த சம்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டார். தன் மகள் காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு மணம் செய்து கொடுத்தார்.
தன் கணவனுக்கு ப் பார்வை இல்லாதபோது தனக்கும் பார்வை தேவையில்லை என்று முடிவு செய்த காந்தாரி திருமணம் நிச்சயமானதும் தன் கண்களை ஒரு துணியால் கட்டி மறைத்துக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவளாகவே வாழத் தீர்மானித்தாள்.
சுவாலாவின் மகனான சகுனி காந்தாரியை முறைப்படி
திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். காந்தாரி தன் கணவரிடம் பக்தி
கொண்டவளாக விளங்கியும், தன் நன்னடத்தையாலும் பெரியோர்களை மகிழ்வித்தாள்.
No comments:
Post a Comment