Saturday, March 11, 2023

7. ஆதிபர்வம் - 5. யயாதி

பிரசேதஸுக்கு 11-ஆவது மகன் தட்சன். அவரிடமிருந்துதான் அனைத்து உயிரினங்களும் தோன்றின. எனவே அவர் பிரஜாபதி (மக்களுக்கு அதிபதி அல்லது தலைவர்) என்று அழைக்கப்படுகிறார்.

தட்சன் ஆயிரம் மகன்களையும், ஐம்பது மகள்களையும் பெற்றெடுத்தார். பிரம்மாவின் மகனான நாரதரால் தட்சனின் மகன்களுக்கு சாங்கிய தத்துவம் முக்திக்கு வழி காட்டும் ஒரு மதக் கோட்பாடு) கற்பிக்கப்பட்டது.

தட்சனின் 50 மகள்களில், 10 பேர் தர்மர் என்பவருக்கும், 13 பேர் மரிச்சியின் புதல்வர் காஷ்யப முனிவருக்கும், 27 பேர் சந்திரனுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். சந்திரனின் இந்த 27 மனைவிகள் விண்மீன் கூட்டத்தின் 27 நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

காஷ்யபரின் மூத்த மனைவியான அதிதி, தேவர்கள் (வானவர்கள்) என்றும் அழைக்கப்படும் ஆதித்தியர்களைப் பெற்றெடுத்தார். மூத்த மகன் இந்திரன். விவஸ்வத் (சூரியன்) மற்ற மகன்களில் ஒருவர். விவஸ்வத் யமன் (இவர் மரணத்தின் கடவுளானார்) மற்றும் மனுவைப் பெற்றெடுத்தார்.

மனு புத்திசாலித்தனமும் ஞானமும் பெற்றவர். அவரிடமிருந்து மனித இனம் தோன்றியது. எனவே மனிதர்கள் மானவர்கள் (மற்றும் மனுஷ்யர்கள்/ மனிதர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். மனுவின் வம்சத்தில் இலா பிறந்தான், அவனுக்குப் புருவரஸ் பிறந்தான்.

புருவரஸுக்கு ஆறு மகன்கள் இருந்தனர், அவர்களில் மூத்தவன் ஆயுஸ். ஆயுஸுக்கு நான்கு மகன்கள் இருந்தனர், அவர்களினல் மூத்தவன் நகுஷன்.

நகுஷன் பெரும் பராக்கிரமம் கொண்டவன். அவன் பல அரசர்களை வென்றான். கடுமையான தவத்தின் மூலம் விண்ணுலகின் அரசனான இந்திரன் ஆகத் தகுதி பெற்றான்.

இந்திரனாகப் பதவி ஏற்க இந்தரலோகத்துக்கு ஒரு பல்லக்கில் கிளம்பிய நகுஷன், வசிஷ்டர், பரத்வாஜர், ஜமதக்னி, கௌதமர், அத்ரி, விஸ்வாமித்திரர், அகஸ்தியர் ஆகிய ஏழு பெரிய முனிவர்களையும் (சப்தரிஷிகள்) தன் பல்லக்கைச் சுமக்கச் செய்தான். அவர்கள் பல்லக்கைச் சுமந்து செல்லும்போதே அவர்களை வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான்.

நகுஷனின் ஆணவத்தால் கோபமடைந்த அகஸ்தியர் அவன் ஒரு பாம்பாக மாற வேண்டும் என்று சபித்தார். (சம்ஸ்கிருதத்தில் 'சர்ப்ப' என்றால் 'சீக்கிரம்' என்று பொருள், பாம்பு என்றும் பொருள். நகுஷன் முனிவர்களைப் பார்த்து 'சர்ப்ப, சர்ப்ப'  (சீக்கிரம், சீக்கிரம்) என்று சர்ப்பம் (பாம்பு) போல் சீறியதால், அகஸ்தியர் 'நீ சர்ப்பமாக ஆகக் கடவாய்!' என்று சாபமிட்டார்.)

நகுஷன் உடனே ஒரு பாம்பாக மாறி பல்லக்கிலிருந்து கீழே விழுந்ததுடன், தான் தவத்தினால் அடைந்த உயர்ந்த நிலையிலிருந்தும் கீழே விழுந்தான்.

நகுஷனுக்கு ஆறு மகன்கள். அவனுடைய மூத்த மகன் யதி துறவறம் பூண்டதால், அவனுடைய இரண்டாவது மகன் யயாதி அரசரானான். யயாதி தனது வீரத்தால் உலகம் முழுவதையும் வென்றான்..

யயாதிக்கு தேவயானி, சர்மிஷ்டை என்ற இரு மனைவிகள் இருந்தனர். அவனுக்கு தேவயானி மூலம் யது, துர்வசு என்ற இரு மகன்களும், சர்மிஷ்டை மூலம் த்ராஹ்யு, அனு, புரு ஆகிய மூன்று மகன்களும் பிறந்தனர்.

தேவயானியின் தந்தை சுக்கிராச்சாரியரின் சொல்லை மீறி, தேவயானியின் அடிமையாக இருந்த சர்மிஷ்டையை யயாதி மணந்ததால், யயாதி தன் இளமையை இழந்து, முதுமையின் தளர்ச்சியால் வாட வேண்டும் என்று சுக்கிராச்சாரியர் சாபம் இட்டார்.

தன்னை மன்னித்து சாபத்திலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று யயாதி சுக்கிராச்சாரியரிடம் கோரினான். சுக்கிராச்சாரியர் சற்று மனம் இரங்கி, யயாதி தன் முதுமையைத் தன் மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனுடைய இளமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தன் சாபத்தை மாற்றினார்.

யயாதிக்குத் தன்  இளமையைக் கொடுத்து முதுமையை வாங்கிக் கொள்ளும் மகன் யயாதிக்குப் பின் அரியணை ஏறுவான் என்றும், அவன் நல்லொழுக்கம் கொண்டு புகழ் பெற்று விளங்குவான் என்றும் சுக்கிராச்சாரியர் அருளினார்.

சுக்கிராச்சாரியரின் சாபத்தின் விளைவாக, யயாதி முதுமை அடைந்தான், ஆனால் உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில் அவனுக்கு இன்னமும் தீவிர ஆசை இருந்தது.

யயாதி தனது ஐந்து மகன்களையும் அழைத்து அவர்களிடம் கூறினான்:

“நான் இளமையாக இருக்க விரும்புகிறேன், இன்னும் சிறிது காலம் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க விரும்புகிறேன். உங்களில் யாராவது என் முதுமையைப் பெற்றுக் கொண்டு சிறிது காலம் உங்கள் இளமையைத் தருவீர்களா? வயதான என் உடலைப் பெற்றுக் கொள்பவன் அரசனாகலாம்!” 

யயாதியின் ஐந்து மகன்களில் நான்கு பேர் அவனுடைய கோரிக்கையை  நிராகரித்து விட்டனர். அவனுடைய கடைசி மகன் புரு தனது இளமையான உடலைத் தன் தந்தையின் வயதான உடலுடன் மாற்றிக் கொண்டான்.

யயாதி பல வருடங்கள் உலக இன்பங்களை அனுபவித்தான், ஆனால் இன்பத்தின் மீதான ஆசை இன்பத்தை அனுபவிப்பதால் தணியாது, தீவிரம்தான் அடையும் என்பதை இறுதியில் உணர்ந்தான்.

புருவிடமிருந்த தான் பெற்ற இளமையான உடலைத் தனது மகனிடம் திருப்பி அளித்து அவனிடமிருந்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, புருவிடம், "நீதான் என் உண்மையான மகன், என் வம்சம் உன் பெயரால் அறியப்படும்!" என்று கூறி வாழ்த்தினான்.

யயாதியின் மற்ற மகன்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் தன் விருப்பத்தை நிறைவேற்ற புரு மட்டுமே முன்வந்ததைச் சுட்டிக் காட்டி யயாதி தன் முடிவை நியாயப்படுத்தினான்.

பின்னர் யயாதி தவம் செய்ய பிருகு மலைக்குச் சென்றான் இறுதியில் தன் பூத உடலை விட்டுத் தன் இரண்டு மனைவிகளுடன் சொர்க்கத்திற்குச் சென்றான்.

யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும், துர்வசுவின் வம்சாவளியினர் யவனர்கள் என்றும், திராஹ்யுவின் சந்ததியினர் போஜர்கள் என்றும், அனுவின் சந்ததிகள் மிலேச்சர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

புருவின் சந்ததியினர் பௌரவர்கள் ஆனார்கள். கௌரவர்களும் பாண்டவர்களும் பௌரவர்கள்தான். புருவின் வழித்தோன்றல்களில் ஒருவர் குரு.

குரு நல்லொழுக்கம் நிறைந்த, புகழ்பெற்ற அரசனாக இருந்ததால், புரு வம்சம் குருவின் பெயரால் குரு வம்சம் என்று அழைக்கப்பட்டது. குரு வம்சத்தில் வந்த இளவரசர்கள் மற்றும் மன்னர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்..

திருதராஷ்டிரனின் மகன்கள் மற்றும் பாண்டுவின் மகன்கள் என்ற இரு சாராருமே கௌரவர்கள்தான். இருப்பினும், பாண்டுவின் மகன்கள் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டதால், கௌரவர்கள் என்ற சொல் பொதுவாக திருதராஷ்டிரனின் மகன்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

8. ஆதிபர்வம் - 6. மஹாபிஷன்

6. ஆதிபர்வம் - 4. பரதன்



No comments:

Post a Comment