Sunday, November 15, 2020

4. ஆதிபர்வம் - 2. தேவர்களும் அசுரர்களும்

காஸ்யப முனிவருக்குப் பல மனைவிகள் உண்டு.

அவர்களுள், அதிதியின் புதல்வர்கள் அற வழியில் நடப்பவர்கள். அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

திதியின் புதல்வர்கள் தீய இயல்பு கொண்டவர்கள். அவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர், (சுரர்கள் என்பது தேவர்களைக் குறிக்கும் சொல். அசுரர்கள் என்பது இதற்கு எதிர்மறையான சொல்.)

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே அடிக்கடி போர் மூண்டது. எல்லாப் போர்களிலுமே அசுரர்கள் தோற்றனர்.

திரும்பத் திரும்பத் தோல்வி அடைந்ததால் அசுரர்கள் விண்ணுலகில் இருந்த தங்கள் ராஜ்யத்தை இழந்தனர். அரசாளும் உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. 

தங்கள் சக்தியைப் பயன்படுத்தி அசுரர்கள் பூமியில் பிறவி எடுத்தனர். பிராணிகள், மனிதர்கள் என்று பல வடிவங்களில் அவர்கள் பிறந்தனர்.

அவர்கள் எல்லா வகை மனிதர்களையும் தொந்தரவு செய்து அவர்களுக்குத் துன்பம் விளைவிக்கத் தொடங்கினர். அவர்கள் முனிவர்களுக்கும் இடையூறுகள் செய்து அவர்களது தவத்துக்கும் சடங்குகளுக்கும் இடையூறுகள் செய்தனர்.

அசுரர்களின் கொடிய செயல்களால் ஏற்பட்ட சுமையைப் பொறுக்க முடியாத பூமாதேவி படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் சென்று தன் சுமையைக் குறைக்கும்படி வேண்டினார்.

தேவர்களை அவளுக்கு உதவச் சொல்வதாக பூமாதேவிக்கு வாக்களித்த பிரம்மா, தேவர்களை அழைத்து பூமியில் பிறவி எடுத்து அசுரர்களை அழிக்கும்படி அவர்களுக்குக் கட்டளை இட்டார்.

தேவர்கள் பிரம்மாவின் கட்டளையை ஏற்றுக் கொண்டனர். 

பிறகு அவர்கள் தேவர்களுக்கெல்லாம் தேவரும், தீமையை அழிப்பவருமான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்துக்குச் சென்று, அவரும் பூவுலகில் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளை விஷ்ணு ஏற்றுக் கொண்டார். 

பூவுலகில் தாங்கள் ஏற்க வேண்டிய பாத்திரங்களைப் பற்றி அவர்கள் விஷ்ணுவிடம் விவாதித்தனர்.

(பிரம்மாவின் கட்டளைப்படி பூவுலகில் பிறந்த எல்லா தேவர்களின் பெயர்களையும் வைசம்பாயனர் கூறுகிறார். (அது மிக நீண்ட பட்டியல் என்பதாலும், மகாபாரதக் கதையை அறிந்து கொள்ள இந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லை என்பதாலும், இந்தப் பதிவில் அது கொடுக்கப்படவில்லை.)

தேவர்கள் முனிவர்களின் வம்சத்தில் பிறந்தனர். இறுதியில் அவர்கள் அசுரர்களை முழுவதுமாக அழித்து, பூமியை வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமாகச் செய்தனர்.

5. ஆதிபர்வம் - 3. சகுந்தலை

3. ஆதிபர்வம் - 1. வைஸம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறுகிறார்



Saturday, November 7, 2020

3. ஆதி பர்வம் - 1. வைஸம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறுகிறார்

அபிமன்யுவின் புதல்வனும் அர்ஜுனனின் பேரனுமான பரீட்சித் ஒரு முறை காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு மானின் மீது அம்பைச் செலுத்தினான். காயம் பட்ட மான் ஓடி விட்டது,

மானைத் தேடி பரீட்சித் ஓடினான். நீண்ட தூரம் அலைந்தும் அவனால் மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

களைப்படைந்த நிலையில் அவன் சமிக முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். சமிக முனிவர் மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து கொண்டு, பசுக்களிடம் பால் குடித்த கன்றுகளின் வாயிலிருந்து வந்த நுரையை அருந்திக் கொண்டிருந்தார்.

பரீட்சித், முனிவரிடம், “நான் அரசன் பரீட்சித் . அபிமன்யுவின் புதல்வன். நான் வேட்டையாடிய மான் ஒன்று ஓடி விட்டது. நீங்கள் அதைப் பார்த்தீர்களா?” என்றான்.

முனிவர் மௌன விரதம் அனுசரித்து வந்ததால், அவர் பதில் சொல்லவில்லை. 

முனிவர் பதில் சொல்லாததால் கோபமடைந்த பரீட்சித் ஒரு இறந்த பாம்பைத் தன் வில்லின் நுனியால் எடுத்து முனிவரின் தோளின் மீது போட்டான். அப்போதும் முனிவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

தன் செயலினால் கோபமடையாமல் முனிவர் பொறுமையாக இருந்ததைக் கண்ட பரீட்சித் தான் செய்ததை நினைத்து வருந்தி அமைதியாக அரண்மனைக்குத் திரும்பினான். 

சமிக முனிவரின் மகன் ஸ்ருங்கின் அப்போது வெளியே சென்றிருந்தான். அவன் கடும் விரதங்கள் புரிந்து சக்தியுடன் விளங்கியவன். கோபக்காரன். எளிதில் சமாதானப்படுத்தப் பட முடியாதவன். 

அரசனான பரீட்சித் ஸ்ருங்கினின் தந்தையின் தோள் மீது ஒரு செத்த பாம்பைப் போட்டு அவரை அவமதித்து விட்டதாக ஸ்ருங்கினிடம் அவன் நண்பன் ஒருவன் வந்து சொன்னான்.

இதைக் கேட்டதும் ஸ்ருங்கின் மிகவும் கோபமடைந்து, ஏழு நாட்களுக்குள் பாம்புகளின் அரசனான தட்சகனால் பரீட்சித் கடித்துக் கொல்லப்படுவான் என்று சாபமிட்டான். 

சாபமிட்ட பிறகு, ஸ்ருங்கின் தன் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்றான். இறந்த பாம்பு தோளில் போடப்பட்ட நிலையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். தான் பரீட்சித்துக்குச் சாபமளித்தது பற்றி அவரிடம் கூறினான்.

முனிவர் தன் மகனை இவ்வாறு கடிந்து கொண்டார்: 

“நீ செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. துறவிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

“நாம் அரசன் பரீட்சித்தின் நாட்டில் வாழ்கிறோம், அவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். அவன் நமக்குப் பாதுகாப்பு அளிக்காவிட்டால், நம்மால் அமைதியாகத் தவம் செய்ய முடியாது. 

“பரீட்சித் இங்கே வந்தபோது களைப்படைந்தும், தாகத்துடனும் இருந்தான். அவனுக்கு என் மௌன விரதம் பற்றித் தெரியாது. அவன் அவசரப்பட்டு நடந்து கொண்டான். அவனை நாம் மன்னித்திருக்க வேண்டும். 

“யாகங்களை அரசன் பாதுகாக்கிறான். யாகங்களால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மழை பொழியச் சொல்கிறார்கள். மழை நாம் வளர்ச்சி அடையத் தேவையான உணவை நமக்கு வழங்கும் மரங்களையும், செடிகளையும் வளர வைக்கிறது. 

“அரசன் இல்லாத நாடு துன்பப்படும். நீ அவசரத்துடனும், முதிர்ச்சியின்றியும் செயல் பட்டு விட்டாய்!"

ஸ்ருங்கின் கூறினான்: "நான் செய்தது சரியோ, தவறோ, நான் சொன்ன வார்த்தைகள்  உண்மையாகும். சாபத்தைத் திரும்பப் பெற முடியாது."

தன் குமாரன் இட்ட சாபத்தைப் பற்றி அரசன் பரீட்சித்துக்குத் தெரிவிப்பதற்காக குருமுகன் என்ற தன் சீடனை அரசனிடம் அனுப்பினார் சமிக முனிவர். 

அரண்மனைக்குச் சென்று அரசனைச் சந்தித்த குருமுகன் நடந்தவற்றை அரசனிடம் தெரிவித்தான்.

தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தைப் பற்றி பரீட்சித் அதிகம் கவலைப்படவில்லை. அந்த உயர்ந்த முனிவரின் மௌன விரதம் பற்றி அறியாமல் அவருக்குத் தவறிழைத்து விட்டோமே என்று மிகவும் வருந்தினான். 

பிறகு பரீட்சித் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து, அவர்கள் யோசனையின்படி, ஒற்றைத் தூணால் தாங்கப்பட்டு நிற்கும் ஒரு மாளிகையைக் கட்டினான். 

அந்த மாளிகைக்குள் பிறர் கண்ணில் படாமல் யாரும் நுழைய முடியாதபடி அது காவலர்களால் நெருக்கமாகக் காவல் காக்கப்பட்டது. 

அந்த மாளிகைக்குள் அந்தணர்கள் அமர்ந்து இடைவிடாமல் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைக்குள் நுழைய தட்சகன் ஒரு தந்திரம் செய்தான். 

சில பாம்புகளைத் தவசிகள் போல் வேடம் புனையச் செய்து, அரசருக்குப் பரிசளிக்கப் பழங்களுடன் அவர்களை அரண்மனைக்குள் நுழைய வைத்தான். ஒரு பழத்துக்குள் ஒரு சிறிய புழுவின் வடிவில் தட்சகன் ஒளிந்து கொண்டான். 

அந்தப் பாம்புகள் தவசிகள் போன்ற தோற்றத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து அரசனைச் சந்தித்தன.  

தன்னைக் காண வந்த தவசிகள் மீது சந்தேகம் கொள்ளாத அரசன் அவர்கள் தனக்கு அளித்த பரிசைப் பெற்றுக் கொண்டான். 

'தவசிகள்' சென்றதும், அரசன் தன் அமைச்சர்களுடன் சேர்ந்து அந்தப் பழங்களை உண்ணத் துவங்கினான். விதிவசமாக தட்சகன் ஒளிந்திருந்த பழத்தை அரசன் கையில் எடுக்க நேர்ந்தது. 

பழத்துக்குள்ளிருந்து ஒரு சிறு புழு வெளியே வந்து கொண்டிருந்ததை கவனித்த பரீட்சித், அந்தப் புழுவைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, தன் அமைச்சர்களிடம், "சூரியன் மறையப் போகிறது. சாபம் பலிப்பதற்கான நேரம் முடியப் போகிறது. இந்தப் புழு தட்சகனாக மாறி என்னைக் கடிக்கட்டும். அதன் மூலம் முனிவரின் வார்த்தைகள் உண்மையாகி, என் பாவமும் நீங்கி விடும்" என்றான். 

அங்கே கூடியிருந்த அறிவார்ந்த மனிதர்கள் அரசன் கூறியதை ஆமோதித்தனர். 

அரசன் பரீட்சித் அந்தப் புழுவை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக் கொண்டான். 

பரீட்சித் சிரித்துக் கொண்டிருந்தபோதே, தட்சகன் தன் உண்மை உருவை எடுத்துக் கொண்டு அரசனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு அவனைக் கடித்து உடனே மரணமடையச் செய்தான். 

தட்சகனின் விஷத்தால் மாளிகை முழுவதும் தீப்பிடித்தது போல் எரிய, எல்லா அமைச்சர்களும் அங்கிருந்து எழுந்து ஓடினர். தட்சகன் வானில் எழும்பிச் செல்வதை அனைவரும் பார்த்தனர்.

பரீட்சித்தின் அமைச்சர்கள் அவனுக்கு இறுதிச் சடங்குகள் செய்த பின், அவனுடைய மூத்த மகனான ஜனமேஜயனுக்கு அரசனாக முடி சூட்டினர். ஜனமேஜயன் அப்போது சிறுவனாக இருந்தான். 

சிறிது காலத்துக்குப் பிறகு, ஜனமேஜயனுக்கு ஒரு வலுவான ஆதரவை உருவாக்க எண்ணி, அமைச்சர்கள் காசி தேசத்து அரசன் சுவர்ணவர்மனை அணுகி, அவனுடைய மகள் வபுஷ்டமாவை ஜனமேஜயனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டனர். 

அவர்கள் யோசனையை ஏற்றுக் காசி அரசன் தன் மகள் வபுஷ்டமாவை ஜனமேஜயனுக்குத் திருமணம் செய்து வைத்தான். 

திருமணத்துக்குப் பின் ஜனமேஜயன் பல இடங்களுக்கும் தன் மனைவியுடன் பயணம் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்தான். 

சிறிது காலத்துக்குப் பிறகு ஜனமேஜயன் தன் அமைச்சர்களிடம், தன் தந்தையைப் பற்றியும், அவருடைய பெருமைகளைப் பற்றியும் கேட்டான். 

பரீட்சித் அறவழியிலும், கருணையுடனும் ஆட்சி புரிந்த மிகச் சிறந்த அரசன் என்பதை அவர்கள் விவரித்தனர். 

பிறகு ஜனமேஜயன் அவர்களிடம் தன் தந்தை எவ்வாறு இறந்தார் என்று கேட்டான். 

அவர்கள் நடந்தவற்றை அவனிடம் விவரமாக எடுத்துக் கூறினர். 

பரீட்சித் தட்சகனால் கடிக்கப்பட்டு உயிர் நீங்கிய பிறகு, தன் மந்திர சக்தியால் அரசரை உயிர்ப்பித்து அவரிடம் வெகுமதி பெறலாம் என்று நினைத்து அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்த காஸ்யபர் என்ற அந்தணரை தட்சகன் வழியில் சந்தித்து, பரீட்சித்தை உயிர்ப்பித்தால் அவருக்குக் கிடைக்கக் கூடிய வெகுமதியை அவருக்குக் கொடுத்து அவரைத் திரும்பிச் செல்ல வைத்ததையும் அவர்கள் ஜனமேஜயனிடம் கூறினர். 

தட்சகனுக்கும், காஸ்யபருக்கும் இடையே நிகழ்ந்த சம்பவம் அமைச்சர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று ஜனமேஜயன் அவர்களிடம் கேட்டான். 

யாகத்தீக்குத் தேவையான விறகு வெட்டுவதற்காக ஆலமரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்த ஒரு மனிதன் தட்சகனும், காஸ்யபரும் பேசிக் கொண்டதைக் கேட்டதாகவும், அந்த மரத்தை தட்சகன் கடித்தபோது, மரத்துடன் சேர்ந்து அவனும் இறந்து விட்டதாகவும், காஸ்யபர் தன் மந்திரத்தால் எரிந்து போன மரத்தை உயிர்ப்பித்தபோது அவனும் உயிர் பெற்றதாகவும், நடந்தவற்றை அவன்தான் தங்களிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர்கள் கூறினர். 

தன் தந்தை தட்சகனால் தந்திரமாகக் கடித்துக் கொல்லப்பட்டதை அறிந்த ஜனமேஜயன் தன் தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்க விரும்பினான்.  

தன் தந்தை தட்சகனால் கடிக்கப்பட்ட பின் அவரை உயிர்ப்பிக்க எண்ணி  அரண்மனைக்கு வந்து கொண்டிருந்த காஸ்யபரை வழியிலேயே தடுத்து நிறுத்தி வெகுமதி அளித்துத் திருப்பி அனுப்பி விட்ட தட்சகன் மீது ஜனமேஜயன்ன் கடும் கோபம் கொண்டான். 

தான் பரீட்சித்தைக் கடித்துக் கொன்ற பிறகு காஸ்யபரால் பரீட்சித் உயிர்ப்பிக்கப்பட்டால், தான் ஒரு கேலிப் பொருளாகி விடுவோம் என்று நினைத்துதான் தக்ஷகன் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று ஜனமேஜயனுக்குத் தோன்றியது. தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்கும்படி ஜனமேஜயன் பாம்புகளின் மீது கோபம் கொண்டு அவற்றை அழிக்க முற்பட்டிருந்த உத்தங்கர் என்ற முனிவராலும் தூண்டப்பட்டான்.  

ஜனமேஜயன் தன் தலைமைப் புரோகிதரை அழைத்து, தன் தந்தையை விஷம் மூலம் எரித்த தட்சகனையும் மற்ற பாம்புகளையும் எரித்துக் கொல்ல வேண்டும் என்ற தன் எண்ணத்தை அவரிடம் கூறினான். 

சர்ப்ப யாகம் என்ற ஒரு சிறப்பான யாகத்தின் மூலம் பாம்பகளை அக்னி தேவதைக்கு உணவாகக் கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

அந்த யாகம் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு அத்தகைய யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யும்படி அரசன் அவருக்கு உத்தரவிட்டான். 

முறைப்படி சர்ப்ப யாகம்* நடத்தப்பட்டது. முனிவர்கள் கூறிய மந்திரத்தின் சக்தியால் பல பாம்புகள் யாகத்தீக்குள் ஈர்க்கப்பட்டு தீயில் எரிந்து சாம்பலாயின. 

ஆனால் ஆஸ்திகர் என்ற  முனிவர் தட்சகனை விட்டு விட வேண்டும் என்று ஜனமேஜயனிடம் கேட்டுப் பெற்ற வரத்தால் தட்சகன் காப்பாற்றப்பட்டான்!

யாகத்தில் வியாச முனிவர் கலந்து கொண்டார். 

தன் முன்னோர்களான பாண்டவர்களின் வரலாற்றைக் கூறும்படி ஜனமேஜயன் அவரை வேண்டினான். 

இந்த வரலாற்றை ஒரு புராணமாக முன்பே தொகுத்திருந்த வியாசர், தன் சீடரான வைஸம்பாயனரை அதைக் கூறும்படி பணித்தார். இந்த வரலாறு பின்பு மகாபாரதம் என்று பெயர் பெற்றது. 

இவ்வாறுதான் மகாபாரதக் கதை முதன் முறையாகப் பலர் முன் கூறப்பட்டது. இந்தக் கதையைக் கேட்டவர்களில் ஒருவரான உக்ரஸ்ரவர் என்ற முனிவர் பிறகு இதை நைமிசாரண்யம் என்ற காட்டில் தவம் செய்து வந்த முனிவர்களுக்குக் கூறினார். 

*ஜனமேஜயர் நடத்திய சர்ப்ப யாகம் குறித்த கதை மகாபாரதக் கதைகள் என்ற என் இன்னொரு வலைப்பக்கத்தில் விரிவாகக் கூறப்படும் (விரைவில்)

4. ஆதிபர்வம் - 2. தேவர்களும் அசுரர்களும்

 2. மகாபாரதம் - பின்னணியும் பெருமையும்




Friday, December 28, 2018

2. மகாபாரதம் - பின்னணியும் பெருமையும்


மகாபாரதத்தை    எழுதியவர் வியாசர் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரியும். ஆனால் வியாசர் யார்? 

வியாசர் விஷ்ணு புராணத்தை  எழுதியவரும், ஒரு மாமுனிவருமான பராசரரின் புதல்வர்.

அந்தணரான பராசரருக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் வியாசர் (சாதிகள் பற்றிப் புராணங்களில் கூறப்படுவதற்குக் காரணம், அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாதி முறையை நியாயப்படுத்துவதற்காக அல்ல, கலப்புத் திருமணம் என்பது ஒரு பொதுவான நிகழ்வாக இருந்திருக்கிறது என்பதையும், வியாசர் போன்ற மகான்கள் கலப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்கள் என்பதையும் காட்டுவதற்காகத்தான் என்பது என் கருத்து).

பராசரரால் எழுதப்பட்ட விஷ்ணு புராணம் புராணங்களில் முதலில் எழுதப்பட்டதாகவும், முதன்மையானதாகவும்  கருதப்பட்டு, 'புராண ரத்னம்' என்று வழங்கப்படுகிறது.

வியாசர் நான்கு வேதங்களைத் தொகுத்தவர். வேதங்கள் காலமற்ற படைப்புகளாகக் கருதப்படுகின்றன. பல்வேறு காலங்களில்,பெயர் தெரியாத பல அறிஞர்களால் அவை உருவாக்கப்பட்டுள்ளன. அவை வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களைப்  பற்றிய அறிவைத் தங்களுக்குள் கொண்டிருக்கின்றன. 

வியாசர் பரந்து கிடந்த வேதங்களைத் தொகுத்து, அவற்றை  ரிக், யஜூர், சாம, அதர்வ என்று நான்கு பிரிவுகளாக வகுத்தார். இதனால், அவர் வேத வியாசர் என்றும் அழைக்கப்படுகிறார். 'வியாச' என்ற சொல்லுக்கே பிரித்தல் அல்லது வகுத்தல் என்று பொருள். தமிழில் வியாசம் என்ற சொல் கட்டுரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதும் இந்தப் பொருளின் அடிப்படையில்தான்.

வியாசர் பிறந்தது ஒரு தீவில். அதனால் இவருக்கு 'கிருஷ்ண த்வைபாயனர்' என்ற பெயரும் உண்டு. 'கிருஷ்ண' என்றால் கருப்பு, 'த்வைபாயனர்' என்றால் தீவில் பிறந்தவர் (சம்ஸ்கிருதத்தில் த்வீபம் என்றால் தீவு). 

வியாசர் என்பது தொகுப்பாளர் என்ற பெயரில் வழங்கப்படும் பொதுப் பெயர் என்பதால் (பல வியாசர் இருந்திருக்கிறார்கள்), மகாபாரதத்தில் இவர் பெயர் பெரும்பாலும் கிருஷ்ண த்வைபாயனர் என்றே வருகிறது.  

மகாபாரதத்தைத் தவிர, பாகவதம் (பகவானின்அதாவது விஷ்ணுவின் கதை) என்ற புராணத்தையும் வியாசர் எழுதி இருக்கிறார். 

வியாசரின் தந்தை பராசரர் எழுதிய விஷ்ணு புராணம் விஷ்ணுவின் பெருமை மற்றும் அவரை வழிபடுவதற்கான வழியைப் பற்றிப் பேசுகிறது. வியாசர் எழுதிய பாகவதம் விஷ்ணுவின்  அவதாரங்களைப் பற்றிக் கூறுகிறது.

பாகவதத்தை எழுதியவர் வியாசர் என்றாலும், அதை எடுத்து இயம்பியவர் அவர் மகன் சுகர். இவரும் ஒரு மாமுனிவர்தான். ஒரு பெரிய முனிவரான பராசரர் தந்தையாகவும், ஒரு பெரிய முனிவரான சுகர் தனயனாகவும் அமையப்பெற்று, தானும் ஒரு பெரிய முனிவராக வாழ்ந்த பெருமை வியாசருக்கு உண்டு.,

பாரதம், பாகவதம் தவிர, வியாசர் பதினைந்து பிற புராணங்களையும் எழுதியுள்ளார். பராசரர் எழுதிய விஷ்ணு புராணம், வியாசர் எழுதிய 17 புராணங்கள் ஆகியவை சேர்ந்து மொத்தம் 18 புராணங்கள். 

இந்தப் பதினெட்டு புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்கள், நான்கு வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் ஆகியவை இந்து சமயத்தின் அடிப்படை நூல்களாக விளங்குகின்றன. (பகவத் கீதை மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளதால்,அதை இங்கே தனியே குறிப்பிடவில்லை. கீதையும் ஒரு அடிப்படை நூல்தான் என்பது அனைவரும் அறிந்ததே.)

இந்து மதத்தின் தத்துவ நூல்களில் ஒன்றான  'பிரம்ம சூத்திரம்' என்ற நூலையும் வியாசர்  எழுதியுள்ளார். பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கம் எழுதிய சங்கரர், ராமானுஜர், மத்வர் மூவரும் அளித்த மாறுபட்ட விளக்கங்கள்தான் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்ற மூன்று தத்துவங்கள் பிறக்க வகை செய்தன.

மகாபாரதத்தில் வியாசர் ஒரு பாத்திரமாக உலா வருகிறார். அவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் தாத்தா.

மகாபாரதத்தை மனதில் உருவாக்கியபின், வியாசர், அதைத் தன்னுடைய சீடர்களுக்கு அதை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக்  கொண்டிருந்தார். 

அவர் இந்தக் காப்பியத்தைத் தன் மனதில் வடித்து விட்டார்.  ஆனால் அவர் அதற்கு இன்னும் அது ஒரு உறுதியான வடிவம் கொடுக்கவில்லை. 

இதற்காக, வியாசர் பிரம்மாவின் வழிகாட்டலை வேண்டினார். 

பிரம்மா அவர் முன் தோன்றியதும், வியாசர் அவரிடம், ​​"இறைவன், வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றின் சாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு கவிதை நூலை நான் உருவாக்கியிருக்கிறேன், இது இந்த வையத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும், போர், அரசியல் மற்றும் ஆட்சி நடத்தும் கலை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், கடவுளை அடைவதற்கான வழி ஆகியவை பற்றியும் விரிவாகப் பேசும்" என்றார்.

"வியாச முனிவனே! உன் படைப்பு வரவிருக்கும் எல்லாக் காலங்களிலும் நிலைத்து நிற்கும். இதை எழுத நீ விநாயகரின் உதவியை நாட வேண்டும்" என்று அருளினார் பிரம்மா..

பிரம்மாவின் யோசனைப்படி மகாபாரதத்தை எழுத விநாயகரின் உதவியை நாடினார் வியாசர் .

"இடைவெளி விடாமல் நீ கதையைச் சொன்னால்  நான் எழுதிக் கொண்டே வருவேன்" என்றார் விநாயகர்.

இதை ஒப்புக் கொண்ட வியாசர், "ஆனால், ஒவ்வொரு செய்யுளின் பொருளையும் புரிந்து கொண்டபின்தான் நீங்கள் அதை எழுத வேண்டும்" என்று பதில் நிபந்தனை விதித்தார்.

இவ்வாறு உலகின் முதல் மிகப் பெரிய நூல் பதிப்பு நிகழ்வு தொடங்கியது!

விநாயகர் கேட்டுக் கொண்டபடி, வியாசர் நிறுத்தாமல் செய்யுட்களைச் சொல்லிக் கொண்டே வருவார். 

ஆனால், தனக்கு நேரம் தேவைப்படும்போது, வியாசர் கடினமான செய்யுட்களைச் சொல்வார். அவற்றை எழுதுமுன் அவற்றின் பொருளை விநாயகர் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்து வர வேண்டிய செய்யுட்களை வியாசர் தன் மனதில் உருவாக்கிக் கொள்வார்.

விநாயகர் பனை ஓலைகளில் வேகமாக எழுதிக் கொண்டிருந்தபோது, அவர்  எழுத்தாணி உடைந்து விட, எழுந்து சென்று வேறொரு எழுத்தாணியை எடுத்து வர நேரமில்லாததால், அவர் தனது ஒரு தந்தத்தை உடைத்து, அதன் கூரான முனையால் எழுதத் தொடங்கினார் என்று ஒரு கதை உண்டு!

விநாயகர் மகாபாரதத்தை மேரு மலையில் எழுதினார் என்றும் கூறப்படுவது உண்டு. இது இரண்டு விஷயங்களை உணர்த்துவதாகப் புரிந்து கொள்ளலாம்.

1) மகாபாரதம் மிக நீளமானது. அதை எழுத மேரு மலையின் பக்கவாட்டுப் பகுதிகளைப் போன்ற ஒரு பெரிய பரப்பு தேவைப்பட்டது. .

2) மகாபாரதம் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது என்பது இந்தக் காவியம் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதைக் குறிக்கிறது .

வியாசர் படைத்த காவியத்தில் 600,000 செய்யுள்கள் இருந்தன. அவற்றில் 100,000 மட்டுமே நாம் வாழும் பூவுலகில் உள்ளன. மீதமுள்ள 500,000 செய்யுள்கள் தேவ லோகம், பித்ரு லோகம் (நம் முன்னோர்கள் வாழும் உலகம்) போன்ற பல உலகங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டன.

இந்தக் காவியம் பல்வேறு வழிகளில் பரவியது. வியாசர் முதலில் இதைத் தனது மகனான சுகருக்கும், பின்னர் தன் மற்ற சீடர்களுக்கும் உபதேசித்தார்.

அர்ஜூனனின் பேரனான ஜனமேஜயனால் நிகழ்த்தப்பட்ட சர்ப்ப யாகத்தில் ஒரு பெரிய கூட்டத்தின் முன்பு  மகாபாரதத்தை வைசம்பாயன முனிவர் எடுத்துரைத்தார். 

இந்தச் சொற்பொழிவைக் கேட்ட உக்ரஸ்ரவர், நைமிசாரண்யத்தில் தவம் செய்து வந்த துறவிகளுக்கு இந்தக் காவியத்தை உபதேசம் செய்தார்.

உக்ரஸ்ரவரை சில துறவிகள் அணுகி அவர் சென்று வந்த இடங்கள் பற்றிய விவரங்களைக் கேட்பதில்தான் மகாபாரதம் துவங்குகிறது. 

ஜனமேஜயரின் சர்ப்ப யாகத்தில் வைசம்பாயனர் மகாபாரதக் கதையை விளக்கிச் சொன்னதைத் தான் கேட்டதை உக்ரஸ்ரவர் கூறியதும், துறவிகள் ஆவல் கொண்டு, அந்தக் கதையைத் தங்களுக்கும் சொல்லும்படி கேட்க, அவரும் அவர்களுக்கு மகாபாரதக் கதையை விரிவாகச் சொல்கிறார்.

நூல் பதிப்பாளரின் ஒப்புதலுக்காக நூலின் சுருக்கத்தைச் சமர்ப்பிப்பது போல், மகாபாரதத்தின் சுருக்கத்தை 150 செய்யுட்களில், நூலின் துவக்கப் பகுதியில் வியாசர் எழுதியுள்ளார்! 

மகாபாரதக் கதையை  இந்த 150 செய்யுட்களிலிருந்தே முழுமையாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், மகாபாரதத்தை துரித உணவு போல் வழங்குவது சரியாக இருக்காது என்று நான் கருதுவதால், இந்தச் சுருக்கக் கதையை நான் இங்கே எழுதவில்லை.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் (கௌரவர் என்ற சொல்லில் வரும் கௌ என்ற எழுத்து cow என்ற ஆங்கிலச் சொல் போல் உச்சரிக்கப்பட்ட வேண்டும், கௌரவம் என்ற சொல்லில் வரும் கௌ போல் இல்லை) இடையே குருக்ஷேத்திரம் (ஹரியானாவில் இன்று உள்ள குருக்ஷேத்திரம்தான் இது என்று கருதுவோர் உண்டு) என்ற இடத்தில் நடந்த போரை, கௌரவர்களின் தந்தையான கண் பார்வை இல்லாத திருதராஷ்டிரருக்கு அவருடைய தேரோட்டியும், ஆலோசகருமான சஞ்சயர் விவரித்தார். 

சஞ்சயர் ஞானக்கண் பெற்றவர் என்பதால் அவரால் திருதராஷ்டிரரின் அரண்மனையிலிருந்தபடியே போர்க்களக் காட்சிகளைத் தன் மனக்கண்ணால் காண முடிந்தது.

துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட  திருதராஷ்டிரரின் புதல்வர்கள் போரில் மடிந்த நிகழ்ச்சிகளை  திருதராஷ்டிரருக்கு சஞ்சயர் கூற வேண்டியிருந்தது.

தன் மகன் துரியோதனனின் மரணத்தைப் பற்றிய செய்தியைக்  கேட்டதும், திருதராஷ்டிரர், தான் செய்த தவறுகளையும், செய்யத் தவறிய விஷயங்களையும்  குறிப்பிட்டுச் சொல்லி வருத்தப்படுகிறார். 

ஒவ்வொன்றாகப் பல சம்பவங்களைச் சொல்லி, அப்போதெல்லாம் தான் தனது புதல்வர்களைத் தீய பாதையில் செல்வதிலிருந்து தடுத்திருந்தால், தன்  மகன்களை இழந்திருக்க வேண்டியிருக்காதே என்று புலம்புகிறார் 

'அப்போதே நினைத்தேன்,'  'அப்போதே நினைத்தேன்,' என்று அடுக்கடுக்காக அவர் சொல்லிப் புலம்புவது நம் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும். 

வாழ்க்கையில் பல சமயங்களில் சில துல்லியமான விஷயங்களை நாம் உணர்ந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு விரும்பத்தகாத விளைவுகளை அனுபவிக்கிறோம். திருதராஷ்டிரரின் புலம்பல் இதைத்தான் உணர்த்துகிறது.

மகாபாரதம் 18 பர்வங்களாக (பகுதிகள் அல்லது தொகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது:

1. ஆதி பர்வம்

2. சபா பர்வம்

3. வன பர்வம்

4. விராட பர்வம்

5. உத்யோக பர்வம்

6. பீஷ்ம பர்வம்

7. துரோண பர்வம்

8. கர்ண பர்வம்

9. சல்ய பர்வம்

10. சௌப்திகா பர்வம்

11. ஸ்ரீ பர்வம்

12. சாந்தி பர்வம்

13. அனுசாஸன பர்வம்

14. அஸ்வமேதிகா பர்வம்

15. ஆஸ்ரமவாசிக பர்வம்

16. மௌஸல பர்வம்

17. மகாப்ரஸ்தானிகா பர்வம்

18. ஸ்வர்க்க ஆரோஹண பர்வம்

மகாபாரதத்தின் முடிவில் வரும் கிருஷ்ணனின் கதையான ஹரிவம்சம் , மகாபாரதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பர்வங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.


Monday, July 24, 2017

1. நுழைவாயில்


நாராயணம் நமஸ்க்ருதவ நரஞ்சைவ நரோத்தமம் 
  தேவீம் சரஸ்வதிம் வ்யாஸம் ததோ ஜயம் உதீரயேத் 

இது மகாபாரதத்தின் துவக்கத்தில் வரும் செய்யுள். "நாராயணனையும், சரஸ்வதியையும், வியாஸரையும் துதித்து மகாபாரதத்தைத் துவங்குகிறேன்" என்பது இதன் பொருள். 

இந்தச் செய்யுளில் வரும்  ஜயம் என்ற சொல் மகாபாரதத்தைக் குறிக்கிறது. மகாபாரதத்துக்கு 'ஜயம்' என்றும் ஒரு பெயர் உண்டு. (இந்தச் செய்யுள் பாகவதத்திலும்  இருக்கிறது. அங்கே ஜயம் என்ற சொல்லுக்கு 'வெற்றி' என்று பொருள் கொள்ள வேண்டும்.) இந்தச் செய்யுள் வியாசரால் எழுதப்பட்டிருக்காது என்று கொள்ளலாம்)

ராஜாஜி  எழுதிய 'வியாசர் விருந்து என்ற மகாபாரத நூலை சிறுவயதில்  படித்த காலத்திலிருந்தே எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. 

என் சிறு வயதிலேயே ராஜாஜியின் இந்த அற்புதமான நூலைப் படிக்கும்படி என்னைத் தூண்டியது என் தாயார் காலம் சென்ற திருமதி விஜயவல்லி அவர்கள்தான். (ஆரம்பப் பள்ளியில் மட்டுமே படித்த என் தாய் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.)

அதற்குப் பிறகு,  கட்டுரைகள், சமயச் சொற்பொழிவுகள் ஆகியவற்றின் மூலம் மகாபாரதம் பற்றிய பல செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக்  கிடைத்தது.

பொதுவாக, ஒரு பெரிய விஷயத்தைக் கடலுடன் ஒப்பிடுவது வழக்கம். மகாபாரதத்தை ஒரு சமுத்திரம் அல்லது பெருங்கடல் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். 

சமுத்திரத்துக்குள் எண்ணிலடங்காத பொருட்கள் புதைந்திருப்பவை போல், மகாபாரதத்துக்குள்ளும் எண்ணிலடங்காத அரிய விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. 

பல விற்பன்னர்கள் இந்த சமுத்திரத்துக்குள் மூழ்கிப் பல அற்புதமான  ரத்தினங்களையும், முத்துக்களையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். 

இன்னும் வெளிக் கொணரப்பட வேண்டிய ரத்தினங்கள் நிறைய இருக்கின்றன.

ஆனால், என் சிறிய முயற்சி, புதிதாக விஷயங்களைத் தேடி  எடுக்கும் நோக்கம் கொண்டதல்ல.

வியாசர் எழுதிய மகாபாரதக் கதையை, முழுமையாக எளிய தமிழில் சொல்வதுதான் என் நோக்கம். ஏற்கெனவே, ஆங்கிலத்தில் மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் எழுதலாமே என்ற ஆர்வத்தினால்தான் இந்த வலைப்பதிவு பிறந்தது.

தமிழில் ஏற்கெனவே பல மகாபாரத நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 

இவற்றுள், மிக எளிமையான முழுமையான நூல் என்று ராஜாஜியின் மகாபாரதத்தைக் குறிப்பிடலாம். (ஆரம்பத்தில் 'வியாசர் விருந்து என்ற பெயரில் வெளிவந்த இந்த நூல், பிறகு 'மகாபாரதம்' என்ற பெயரிலேயே பல பதிப்புகள் வெளிவந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.)

மகாபாரதம் முழுவதையும் அப்படியே தமிழில் மொழி பெயர்த்தும் நூல்கள் வந்திருக்கின்றன. ('ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா' என்ற அஹோபில மடத்தின் பத்திரிகையில், பல வருடங்களுக்கு முன், மகாபாரதத்தின் முழுமையான மொழிபெயர்ப்பு தொடராக வந்தது.)

இந்த வலைப்பதிவு மகாபாரதத்தின் நேரடி மொழி பெயர்ப்பாக இல்லாமல், ஆயினும் முழுக்கதையைத் தாங்கி வருவதாக இருக்கும். 

வர்ணனைகள், சில கூடுதல் விவரங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு, உரையாடல்களையும் சில இடங்களில் சுருக்கி, படிப்பதற்கு எளிமையாகவும், சுவாரசியமாகவும் இந்தக் காப்பியத்தை வழங்க வேண்டும் என்பது என் நோக்கம். 

இந்த நோக்கத்தை என்னால் எந்த அளவுக்குச்  செயல்படுத்த முடிந்திருக்கிறது என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்!

மகாபாரதத்தில் பல துணைக்கதைகள் இருக்கின்றன. முக்கியக் கதைக்கு நேரடித் தொடர்பு இல்லாத இந்தக் கதைகளை மகாபாரதக் கதைகள் என்று ஒரு தனி வலைப்பிரிவில் எழுதி வருகிறேன். 

இந்த வலைப்பதிவைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். 

தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால், அவை திருத்தப்பட்ட வேண்டியவை என்றால், திருத்திக் கொள்ள எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை. 

அச்சடிக்கப்பட்ட புத்தகம் போல் இல்லாமல் வலைப்பதிவில் தவறுகளை உடனே திருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறதே!

என் 65ஆவது வயதில் இந்த முயற்சியைத் துவங்கும் நான், நான் வணங்கும் திருமால், அமரர்களாகி விட்ட என் பெற்றோர், என்னை உருவாக்கிய ஆசிரியர்கள் ஆகியோரின் அருளாலும்  எனக்கு எண்ணிலடங்காத உதவிகளைச் செய்து வரும் என் குடும்பத்தினர், உறவினர்,  நண்பர்கள், பிற நலம் விரும்பிகள்  ஆகியோரின் நல்வாழ்த்துக்களாலும், இந்தப் பணியை என் வாழ்நாள் முடிவதற்குள் செய்து முடிப்பேன் என்று நம்புகிறேன்.

மகாபாரதம் என்ற அற்புத உலகுக்கு உங்களை வரவேற்கிறேன்!